தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சியில் அக்கட்சியின் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது ''சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கேட்சே என்று அவர் பேசியிருந்தார். மேலும் இது சமரச இந்தியாவாக சமமான இந்தியாவாக, மூவர்ணக் கொடியே இருக்கும் இந்தியாவாக இருக்க வேண்டும் என்பது தான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன் என மார்தட்டிச் சொல்வேன்''என்று கமல்ஹாசன் பேசியிருந்தார்.
நடிகர் கமல்ஹாசனின் இத்தகைய பேச்சு நாடு முழவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கமலின் இத்தகைய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்திடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு 'இதுகுறித்து கருத்து கூறவிரும்பவில்லை' என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.