இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் இதற்கு முன்பாக அண்ணாத்த படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்திலும் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் மோகன்லால், சிவராஜ் குமார், சுனில், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தமன்னா உள்ளிட்ட பலரும் நடித்து வருவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்தின் வழக்கறிஞரான இளம்பாரதியிடம் இருந்து ரஜனிகாந்த் சார்பில் நோட்டீஸ் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலின் படி, "ரஜினிகாந்தின் நற்பெயர் அல்லது ஆளுமைக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அது ரஜினிகாந்திற்கு பெருமை இழப்பை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட ரஜினிகாந்திற்கு அனைத்து அம்சங்களிலும் உள்ள ஆளுமை, பப்ளிசிட்டி, உரிமை உள்ள நிலையில் அவரது குரல், பெயர், புகைப்படம், கேலிச்சித்திர படம் உள்ளிட்டவற்றை பல்வேறு தளங்கள், ஊடகங்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துவதாக அவரது கவனத்திற்கு வந்துள்ளது.
மேலும் பொதுமக்கள் மத்தியில் அவர்களின் தயாரிப்புகளை வாங்குவதற்கும் அவர்களின் தளம் மற்றும் ஊடகத்தை அணுகுவதற்கும், பொது மக்களை கவர்ந்திழுக்க வேண்டும் என்பதற்காகவும் பலரும் பயன்படுத்துகிறார்கள். டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் தனித்துவம் வாய்ந்த ரஜினிகாந்த் படம், பெயர், புகைப்படங்கள் மற்றும் தோற்றம் ஆகியவற்றை அவர் அங்கீகரிக்காமல் பயன்படுத்துவது பொதுமக்களிடையே குழப்பத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்த கூடும்.
இதனால் ரஜினிகாந்தின் ஆளுமையின் அனைத்து அம்சங்களிலும் அதாவது பெயர், குரல், படம் மற்றும் பிற தனித்துவமான கூறுகள் உள்ளிட்டவற்றில் உள்ள உரிமைகள் எதையும் யாராவது மீறினால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்டப்படி உரிமையியல், குற்றவியல் நடைவடிக்கைகள் எடுக்கப்படும்" என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.