நடிகர் மாதவன், பிரபல இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அண்மையில், ‘ராக்கெட்ரி தி நம்பி விளைவு’ என்கிற திரைப்படமாக இயக்கி நடித்திருந்தார்.
நம்பி நாராயணனாக மாதவன் கச்சிதமாக பல்வேறு உடல்வாகுகளுடன் நடித்திருந்ததற்காக, அவர் அவருடைய ரசிகர்கள் மற்றும் திரை கலைஞர்கள் மத்தியில் பாராட்டினை பெற்றிருந்தார். தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது.
இந்த திரைப்படத்தின் தமிழ் பதிப்பில் நம்பி நாராயணனை பேட்டி எடுக்கும் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நேரடியாக சூர்யாவாகவும், இதே போல் இந்தி பதிப்பில் நடிகர் ஷாருக்கான் நேரடியாக ஷாருக்கானாகவும் நடித்திருந்தனர். இவர்களின் கௌரவ வேடம் திரைப்படத்தில் முக்கியமாக அமைந்தது. இப்படத்தில் நடிகை சிம்ரன் நம்பி நாராயணனின் (மாதவனின்) மனைவியாக நடித்திருந்தார்.
கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நம்பி நாராயணன் இஸ்ரோவில் பணிபுரிந்தத்துடன், வெளிநாடுகளுக்கு சென்று இந்தியாவுக்கான தரமான ராக்கெட் என்ஜினை உற்பத்தி செய்வதற்கான முயற்சியை தன் வாழ்நாள் கடமையாக எடுத்துக் கொண்டு அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வந்ததும், அதில் அவர் அடைந்த சாதனைகள், சவால்கள், அவர் சந்தித்த சிக்கல்கள், அரசியல்கள், உள்ளிட்டவற்றையும் மையமாக வைத்து ராக்கெட்ரி திரைப்படம் உருவாகி உள்ளது.
இந்த திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் மாதவனுக்கு பாராட்டுகளை ஏற்கனவே தெரிவித்து இருந்தார், தற்போது ராக்கெட்ரி திரைப்படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை, நடிகர் மாதவன் அவருடைய இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் நடிகர் மாதவனுக்கு ரஜினிகாந்த் சால்வை அணிவித்து பாராட்டக்கூடிய காட்சிகளை காண முடிகிறது.
இதே போல் இவர்களுடன் நம்பி நாராயணன் அமர்ந்திருக்கிறார். அதன் பின்னர் ரஜினியின் காலில் விழுந்து நடிகர் மாதவன் ஆசீர்வாதமும் பெறுகிறார்.