கடந்த 2002-இல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் பாபா. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா உள்ளிட்ட ரஜின்காந்த்தின் தொடர் வெற்றிப்படங்களை அடுத்து நான்காவது முறையாக பாபா படத்தை இயக்கினார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.
கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ் கான் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். பிருந்தா, பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் நடன இயக்குனர்களாக பணிபுரிந்தனர்.
மகா அவதாரமான பாபாஜியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம், வெளியான சமயத்தில், பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்தப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி அடிக்கடி காட்டும் அந்த பாபா முத்திரை, படம் வெளியான சமயத்தில் குழந்தைகளையும் வசீகரித்து, இப்போதுவரை அவருக்கான ஒரு தனி அடையாளமாகவே கருதப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இந்தப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளது. இதற்காக முற்றிலும் புதிய கோணத்தில் இந்தப்படம் புதிதாக மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இந்த நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இந்த படத்தினை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளன்று ஒரே ஒரு காட்சியாக திரையிட திட்டமிட்ட குழுவினர் , படத்திற்கு ஏற்பட்டிருக்கும் பெரும் எதிர்பார்ப்பினை கண்டு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் பல திரையரங்குகளில் வெளியிட தீவிரமாக யோசித்து வருகின்றனர். அத்துடன் DI, மிக்ஸிங் போன்ற தொழில்நுட்ப மாற்றங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், படத்தின் முன்னோட்டத்தை, தான் முதலில் பார்வையிடுவதற்கு கோரிக்கை வைத்துள்ளார். இதன் மூலம், தன்னால் படத்தின் இசையினை மேலும் மேம்படுத்த இயலுமா? என்பதனை அவர் பார்வையிட உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதிய காட்சிகளுக்கு டப்பிங் பேசியிருந்தார். சூப்பர் ஸ்டார் மற்றும் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஆகிய இருவரும் பாபாவின் மறுவெளியீட்டுக்கான ஹைப் மற்றும் 'அற்புதமான வரவேற்பினை கண்டு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தியுள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.