சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ரிலீஸ் மீதான எதிர்பார்ப்பு, ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், உலகளவில் தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கும் அதிகரித்துள்ளது.
ரஜினி நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றியும், கலை இயக்குனராக மிலனும், எடிட்டராக ரூபனும் பணிபுரிகின்றனர். டி.இமான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
ஏற்கனவே அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் அனைத்தும் வெளியாகியதுடன், அண்ணாத்த என துவங்கும் தொடக்க பாடல், சார சார காற்றே எனும் டூயட் பாடல், மருதாணி எனும் வீட்டு விசேஷ பாடல், வா சாமி எனும் சிறுதெய்வ பாடல் என அண்ணாத்த பட பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி ஹிட் அடித்துள்ளன. தவிர, அனைத்து பாடல்களும் ஒரே ஆல்பமாகவும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இதனிடையே அண்ணாத்த படத்தின் டிரைலரில் இருந்து, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் காளையன் என்கிற பெயரில் நடிப்பது உறுதியானது. மேற்படி ‘அண்ணாத்த’ படத்திற்கு யு/ஏ என்று சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் நீளம் 2 மணிநேரம் மற்றும் 43 நிமிடங்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.
தீபாவளி வெளியீடாக, நவம்பர் 4-ஆம் தேதி, 100% இருக்கைகளுடன் திரையரங்கில் நேரடியாக வெளியாகவிருக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், ஓவர்சீஸ் எனப்படும் வெளிநாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமங்களிலும் அண்ணாத்த திரைப்படம் ரெக்கார்டு பிரேக்கிங் சாதனையை புரிந்துள்ளது.
அதன்படி, ஓவர்சீஸ் டிஜிட்டல் உரிமத்தை கைப்பற்றியுள்ள Qube டிஜிட்டல் சினிமா புரொவைடர், அண்ணாத்த (தமிழ்) படத்தை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, கனடா, ஐரோப்பா, மலேசியா, மிடில் ஈஸ்ட், வடக்கு அயர்லாந்து, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் ரிலீஸ் பண்ணுகிறது.
இதேபோல், ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படத்தின் தெலுங்கு மொழி வெர்ஷனான பெத்தண்ணா படத்தை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் கனடாவிலும் Qube டிஜிட்டல் சினிமா புரொவைடர் ரிலீஸ் பண்ணுகிறது.
குறிப்பாக US-ல் மட்டும் சுமார் 500 திரையரங்குகளில் அண்ணாத்த படம் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. பிரான்சிலும் முதல் முறையாக அதிக திரையரங்குகளில் அண்ணாத்த படம் ரிலீஸ் ஆகிறது. இதன் மூலம், உலகிலேயே அதிக திரையரங்குகளில் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகும் திரைப்படமாக அண்ணாத்த படம் உருவெடுத்துள்ளது.
கொரோனாவுக்கு பிறகு வெளிநாடுகளில் 1000த்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் முதல் படமாக அண்ணாத்த படம் சாதனை படைத்துள்ளது. குறிப்பாக US-ல் மட்டும் சுமார் 500 திரையரங்குகளில் அண்ணாத்த படம் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. பிரான்சிலும் முதல் முறையாக அதிக திரையரங்குகளில் அண்ணாத்த படம் ரிலீஸ் ஆகிறது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி - டார்லிங் ஹார்பரில் உள்ள உலகின் மிகப்பெரிய திரையரங்கான The Panasonic IMAX திரையரங்கு உட்பட ஆஸ்திரேலியாவில் 60க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், நியூஸிலாந்தில் சுமார் 10 திரையரங்குகளிலும், கனடாவில் சுமார் 14 திரையரங்குகளிலும், மலேசியாவில் சுமார் 100 திரையரங்குகளிலும், மிடில் ஈஸ்டில் சுமார் 80 திரையரங்குகளிலும், வடக்கு அயர்லாந்து, சிங்கப்பூரில் சுமார் 20 திரையரங்குகளிலும், ஸ்ரீலங்காவில் சுமார் 50 திரையரங்குகளிலும், மற்றும் இங்கிலாந்தில் 30 திரையரங்குகளிலும் அண்ணாத்த படம் வெளியாகிறது.
இதுவரை எந்த திரைப்படங்களும் இப்படியானதொரு சாதனையை நிகழ்த்தாத நிலையில், அதுவும் கொரோனா - பாண்டமிக் - ஊரடங்கு என்று வெளிநாடுகளில் நிலவும் இந்த நெருக்கடியான நிலையிலும், கிட்டத்தட்ட 1100+ வெளிநாட்டு திரையரங்குகளில் அண்ணாத்த படம் வெளியாவது என்பது ரஜினி ரசிகர்கள் மற்றும் திரைப்பட ரசிகர்களால் மகிழ்ச்சிக்குரிய திருவிழாவாகவே பார்க்கப்படுகிறது.
மேற்கூறிய வெளிநாடுகளில், எந்தெந்த திரையரங்குகளில் அண்ணாத்த மற்றும் பெத்தண்ணா படங்கள் வெளியாகின்றன என்பது குறித்த பட்டியலை இணைப்பில் உள்ள இந்த லிங்க்கில் காணுங்கள்.
https://blog.moviebuff.com/annaatthe-overseas-theatre-list/#USA_