உலக அளவில் ஓமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதால், பல இடங்களில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன.

பொங்கல் ரிலீஸ்
இதனிடையே பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களின் நிலை குறித்த கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்துவந்துள்ளன. எனினும் இந்த பொங்கலுக்கு ஒரு ரஜினி படம் வருகிறதென்றால் வெகுஜன மக்களுக்கு கொண்டாட்டம் அல்லவா..? ஆம், ரஜினி நடித்த அண்ணாத்த படம் தான் பிரபல சேனலில் ரிலீஸ் ஒளிபரப்பாகவுள்ளது.
ரஜினியின் அண்ணாத்த!
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப் படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அவருடன் இணைந்து நயன்தாரா முக்கிய முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அண்ணாத்த கதை
தஞ்சாவூர், சூரக்கோட்டை கிராமத் தலைவராக காளையன் ரஜினி. தங்கை தங்க மீனாட்சியாக கீர்த்தி சுரேஷ். மாமன் மகள்களாக குஷ்பூ, மீனா இருவரும் தங்கள் மகன்களுள் ஒருவருக்கு கீர்த்தி சுரேஷை மனம் முடிக்க கேட்கின்றனர். ஆனால் இறுதியில் ரஜினி தன் தங்கை மீது வைத்திருக்கும் அன்பை புரிந்துகொண்டு விலக, யாரும் எதிர்பாராத கீர்த்தி சுரேஷின் முடிவு ரஜினிக்கே அதிர்ச்சி தருகிறது.
ஆனாலும் தங்கை சந்தோஷம்தான் முக்கியம் என ரஜினி அந்த எதிர்பாராத வலியை தாங்கிக்கொள்ள, ஆனால் தங்கை சந்தோஷமாக இல்லை என்பதை அறியும் அண்ணன் ரஜினி, தங்கைக்கே தெரியாமல் தங்கையின் வாழிடம் சென்று, அவளின் சந்தோஷம் அழிய காரணமாய் இருக்கும் வில்லன்களை சூர(க்கோட்டை) சம்ஹாரம் செய்கிறார் என்பதே ‘அண்ணாத்த’.
தொழில்நுட்ப கலைஞர்கள்
வெற்றி பழனிசாமி அண்ணாத்த படத்தின் ஒளிப்பதிவை கவனித்துக்கொண்டார். கலை இயக்குனராக மிலன், படத்தொகுப்பை எடிட்டர் ரூபன் உள்ளிட்டோர் கவனித்துக்கொண்டனர். டி.இமானின் இசை மற்றும் பின்னணி இசையில் அண்ணாத்த படத்தின் அனைத்து பாடல்களும் சூழலுக்கேற்ப பொருந்தி வந்து ஹிட் அடித்துள்ளன.
இப்படத்தில் ரஜினியுடன் சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ், சத்யன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் இந்த திரைப்படத்தை தயாரித்து இருந்தது.
கமர்ஷியல் ஃபார்முலாவில் பட்டையை கிளப்பிய படம்
அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட ஆக்ஷன், காமெடி, செண்டிமெண்ட் என ரஜினியின் பட்டையை கிளப்பும் கமர்ஷியல் ஃபார்முலாவில் வெளியான அண்ணாத்த படம் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகி நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு மிகப்பெரும் ட்ரீட்டாக அமைந்தது.
எப்போது? எந்த சேனலில்?
இந்நிலையில் தான் அண்ணாத்த திரைப்படம், தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சன் டி.வியில் வரும் ஜனவரின் 14-ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
இது தொடர்பான ப்ரோமோவுடன் கூறிய அறிவிப்பு சன் டிவியில் வெளியாகி இருக்கிறது.