2019 ஆம் ஆண்டுக்கான 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் நடைபெற்றது.
இதில், சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் சினிமாவுக்கு ஆற்றிய கலைப்பணிகளுக்கு, இந்திய அரசின் உயரிய கலைத்துறை விருதான, தாதா சாகேப் பால்கே விருது அவருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
1975-ல் மறைந்த இயக்குனர் கே பாலசந்தரின் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் ரஜினிகாந்த். பின்னர் தமது 46 வருட திரைப்பயணத்தில், எண்ணற்ற பல சாதனைகள் படைத்த, நடிகர் ரஜினிகாந்த் உலகம் முழுக்க ரசிகர்களால் கொண்டாட படுபவர். இந்நிலையில் இந்த தாதா சாகேப் பால்கே விருதை பெற்ற ரஜினிகாந்த் தன் கருத்தை வெளிப்படுத்தி நன்றி சொல்லி நெகிழ்ந்தார்.
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், லதா, இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் வீற்றிருந்த அரங்கில் பேசிய ரஜினிகாந்த், “இந்த மதிப்புமிக்க விருதைப் பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், மதிப்புமிக்க தாதா சாகேப் பால்கே விருதுக்கு அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி, இந்த விருதை எனது குருநாதர் கே. பால சந்தர்க்கு அர்ப்பணிக்கிறேன். கர்நாடகாவில் உள்ள எனது ரசிகர்களுக்கும், என்னை ஆன்மிக ஈடுபாட்டுடனும், நல்வழியிலும் வார்த்தெடுத்த எனது சகோதரர் சத்ய நாராயணாவுக்கும் நன்றி.
மேலும் என்னுடன் பணிபுரிந்த பேருந்து ஊழியர் லால் பகதூருக்கு நன்றி. என் நண்பரான அவர்தான் எனக்குள் இருக்கும் திரைப்பட நடிகனை எனக்கு அடையாளம் காட்டி ஊக்கப்படுத்தினார். என் படங்களை தயாரித்த எனது தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அனைவருக்கும் நன்றி. விநியோகஸ்தர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் தமிழ் மக்கள்... அவர்கள் இல்லாமல் நான் ஒன்றுமே இல்லை.” என நெகிழ்ந்தார்.
தவிர, தேசிய விருதுகள் தொடர்பில், சிறந்த நடிகர் தனுஷ் (அசுரன்), சிறந்த துணை நடிகர் விஜய்சேதுபதி (சூப்பர் டீலக்ஸ் ), ஜூரி விருது பார்த்திபன் (ஒத்த செருப்பு), சிறந்த தமிழ் படம் விருது வென்ற படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் (அசுரன்), சிறந்த இசையமைப்பாளர் டி.இமான் (விஸ்வாசம்-கண்ணான கண்ணே), சிறந்த ஒலிக்கலவை ரசூல் பூக்குட்டி (ஒத்த செருப்பு), சிறந்த குழந்தை நட்சத்திரம் நாக விஷால் (கே.டி (எ) கருப்புதுரை) ஆகியோரும் கவுரவிக்கப்பட்டனர்.