பிரபல இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணிக்கு இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இயக்குனர் எஸ்.எஸ் ராஜமௌலி அவருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருக்கிறார்.
மருத்துவம், கல்வி, இலக்கியம், கலை உள்ளிட்ட பல பிரிவுகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் பத்ம விருதுகளை அளித்து கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் குடியரசு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது பெறும் நபர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் பிரபல இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
1961 ஆம் ஆண்டு பிறந்த கீரவாணி தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரபல இசையமைப்பாளராக கொண்டாடப்படுகிறார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான RRR திரைப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்தார். ராஜமௌலியின் ஃபேவரைட் இயக்குனராக அறியப்படும் கீரவாணி இசையில் வெளிவந்த 'நாட்டு நாட்டு' பாடல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இதனையடுத்து கோல்டன் குளோப் விருதுக்கு இரண்டு பிரிவுகளில் RRR படம் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், இதில் சிறந்த பாடலுக்கான விருதை "நாட்டு நாட்டு" பாடல் வென்றதையடுத்து இசையமைப்பாளர் கீரவாணி விருதை பெற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து, ஆஸ்கார் நாமினேஷனில் ஒரிஜினல் சாங் என்ற பிரிவில், RRR படத்தில் வரும் நாட்டு நாட்டு பாடல் தேர்வாகி உள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில், கீரவாணிக்கு இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இயக்குனர் ராஜமௌலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார் அதில்,"உங்களுடைய பல ரசிகர்கள் நினைப்பது போல இந்த அங்கீகாரம் மிக தாமதமாக கிடைத்திருக்கிறது. ஆனால், நீங்கள் சொல்வது போல் பிரபஞ்சம் விசித்திரமான வழிகளில் ஒருவரின் முயற்சிகளுக்கு வெகுமதி அளிக்கிறது. என்னால் பிரபஞ்சத்திடம் பேச முடிந்தால் கொஞ்சம் இடைவெளி கொடுங்கள். ஒன்றை முழுமையாக அனுபவித்த பிறகு, இன்னொன்றைக் கொடுங்கள் என சொல்லுவேன்" என குறிப்பிட்டுள்ளார். மேலும், அடுத்த பதிவில் கீரவாணியை தன்னுடைய மூத்த சகோதரர் என்றும் ராஜமௌலி குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில் இந்த ட்வீட் தற்போது வைரலாக பரவி வருகிறது.