உலகத் தொலைக்காட்சியில் முதன்முறையாக, பாகுபலி இயக்குநர் ராஜமௌலியின் தந்தை கே.வி.விஜயேந்திர பிரசாத் இயக்கிய ராஜசிங்கம் திரைப்படம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் அக்டோபர் 3 -ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று, பிற்பகல் 3:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
தெலுங்கு திரைப்பட இயக்குனராக அறியப்படும் பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி. தென்னிந்திய திரை உலகில் தம்முடைய பிரம்மாண்ட ஹிஸ்டாரிக்கல் திரைப்படங்களால் இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர். தெலுங்கில் இவர் இயக்கிய பல திரைப்படங்கள் ஹிட் அடித்தன.
இதேபோல் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கிய யமதொங்கா, ராம்சரண் நடிப்பில் ராஜமௌலி இயக்கிய மகதீரா, பிரபாஸ் நடிப்பில் ராஜமௌலி இயக்கிய சத்ரபதி உள்ளிட்ட திரைப்படங்கள் தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றன. தொடர்ந்து ராம்சரண் நடித்த மகதீரா திரைப்படம் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.
பின்னர் ராஜமௌலி பன்மொழிகளில் நேரடியாக இயக்கிய திரைப்படம் பாகுபலி தொடர்வரிசை படம். இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகியது. மிகப்பெரிய வசூலையும், நல்ல வரவேற்பையும் பெற்ற இந்த பிரம்மாண்ட திரைப்படத்தை அடுத்து ராஜமௌலி தம்முடைய ஆஸ்தான ஹீரோக்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இருவரின் நடிப்பிலும் ஆர்.ஆர்.ஆர் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இவருடைய தந்தை தான் பிரபல எழுத்தாளர் கே.வி.விஜயேந்திர பிரசாத். கதை எழுத்தாளராகவும் திரைக்கதை மற்றும் வசன கர்த்தாவாகவும் இயக்குனராகவும் அறியப்படுபவர் கே.வி.விஜயேந்திர பிரசாத். பெரும்பாலும் ராஜமௌலி இயக்கிய திரைப்படங்களின் கதைகளில் கே.வி.விஜயேந்திர பிரசாத்தின் பங்கு இருக்கும்.
எழுத்தாளராக கே.வி.விஜயேந்திர பிரசாத், ராஜமௌலி இயக்கிய சத்ரபதி, யமதொங்கா, மகதீரா, பாகுபலி 2 பாகங்கள் உள்ளிட்ட படங்களின் கதைகளில் பணிபுரிந்திருக்கிறார். தொடர்ந்து ராஜமௌலி இயக்கும் ஆர்.ஆர்.ஆர் படத்திலும் கே.வி.விஜயேந்திர பிரசாத் பணிபுரிகிறார்.
இவை தவிர கே.வி.விஜயேந்திர பிரசாத், தளபதி விஜய் நடித்து, அட்லீ இயக்கி பன்மொழிகளில் வெளியான மெர்சல் திரைப்படத்தின் திரைக்கதையையும் எழுதியிருக்கிறார். ஹிந்தியில் கங்கனா ரனாவத் நடித்த ஜான்சிராணியின் கதையான மணிகர்ணிகா என்கிற வரலாற்று திரைப்படத்தின் கதையிலும் கே.வி.விஜயேந்திர பிரசாத் பணிபுரிந்துள்ளார்.
அண்மையில் கங்கனா ரனாவத் நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தமிழ்-தெலுங்கு-ஹிந்தியில் வெளியான தலைவி திரைப்படத்தின் திரைக்கதை - வசன பணிகளிலும் விஜயேந்திர பிரசாத் பணிபுரிந்திருக்கிறார். இந்நிலையில் இவர் இயக்கிய ராஜசிங்கம் திரைப்படம் தமிழில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பாகிறது.
ஆம், இயக்குனர் கே.வி.விஜயயேந்திர பிரசாத் இயக்கத்தில், நாகார்ஜூனா நடித்து 2011 –ஆம் ஆண்டு வெளிவந்த ராஜசிங்கம் திரைப்படம் உலகத் தொலைக்காட்சியில் முதன்முறையாக, கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிறது. இந்த திரைப்படமும் ஒரு வரலாற்று திரைக்கதையைக் கொண்ட படம் ஆகும். அதிரடி ஆக்ஷன் நிறைந்த இப்படத்தில் நாகார்ஜுனா, ஸ்நேகா மற்றும் பேபி ஆனி ஆகியோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
மனதை உருக்கும் கதை, சண்டை மற்றும் வரலாற்று நிகழ்வுகள் நிறைந்த இத்திரைப்படத்தின் கதை, மல்லம்மா (பேபி ஆனி –ன் நடிப்பில்) என்ற ஒரு ஆதரவற்ற சிறுமியைச் சுற்றி பின்னப்பட்டிருக்கிறது. அவளது கிராமத் தலைவரின் வெறுப்பு மற்றும் ஆட்சேபனையின் காரணமாக பாடுகின்ற சுதந்திரத்தை இழக்கிறாள் இச்சிறுமி.
இதற்கிடையே, அவளது சுதந்திரத்திற்காகப் போராடுமாறு அவளை ஊக்குவிப்பதற்கு மல்லம்மாவிற்கு இசை கற்றுத்தரும் ஆசிரியர் ராஜசிங்கத்தின் (நாகார்ஜுனா) கதையை அவளுக்கு சொல்கிறார்கள். ராஜசிங்கத்தின் வீரதீர பராக்கிரம செயல்களால் உத்வேகம் பெறும் மல்லம்மா, எப்படி அவளது சிரமங்களையும் தடைகளையும் வென்று சாதிக்கிறாள் என்பதே இந்த கதையின் மையமாகும்.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சண்டே சினி காம்போ எனும் புரோகிராமின் கீழ் 12:30 மற்றும் 3:30 மணிக்கு 2 திரைப்படங்கள் ஒளிபரப்பப் படவிருக்கின்றன. அதில் ஒரு படம்தான் நாகார்ஜூனா நடிப்பில் பிற்பகல் 3:30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் ராஜசிங்கம். இதேபோல் பிற்பகல் 12:30 மணிக்கு ஜூனியர் என்.டி.ஆர் நடித்த அசோக் – தி லயன் படம் ஒளிபரப்பாகிறது.
நடிகர் நாகார்ஜூனா தற்போது தெலுங்கில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இவர் தமிழில் ரட்சகன், பயணம் உள்ளிட்ட நேரடித் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும், பன்மொழிப்படங்களாக மனம், வைல்டு டாக் உள்ளிட்ட திரைப்படங்கள் நாகார்ஜூனா நடிப்பில் தமிழில் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.