ரஜினி நடித்த ’உழைப்பாளி’ படம் மூலம் நடன இயக்குநராக திரையுலகுக்கு அறிமுகமானவர் ராகவா லாரன்ஸ். பின்னர் சிறுசிறு வேடங்கள், ஹீரோ, இயக்குனர் என்று பல பணிகள் ஆற்றி தற்போது தமிழின் முன்னணி ஹீரோவாக உள்ளார்.
இந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான ’காஞ்சனா 3’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இதைத் தொடர்ந்து பாலிவுட்டில் அக்ஷைகுமார் நடிப்பில் இவர் இயக்கும் ’லக்ஷ்மி பாம்’ அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது.திரைத்துறையை கடந்து மாற்றுத்திறனாளிகளுக்கும், உதவி தேவைப்படுவோருக்கும் இவர் தன்னால் இயன்ற பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
சமீபத்தில் தன்னிடம் அதிக எண்ணிக்கையில் மக்கள் உதவி கோரியதால் அதற்காக தமிழக முதல்வரை நேரில் சந்தித்தார். இந்நிலையில் ட்விட்டரில் இவரிடம் நர்சிங் படிக்கும் பெண் ஒருவர் இறுதி ஆண்டு கட்டணம் செலுத்த உதவி கேட்டிருந்தார். இதற்கு உடனடியாக பதில் அளித்த லாரன்ஸ் ’படிப்பின் மதிப்பை நான் அறிவேன், ஏனென்றால் நான் படித்ததில்லை’ என்று தெரிவித்தோடு அவருக்கு உதவ தொடர்பு விவரங்களை கேட்டுக் கொண்டார்.
மேலும் தான் அவருக்கு உதவியபோல அவரும் படித்து முடித்த பிறகு படிக்க பணம் இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் லாரன்ஸ்.