நடன இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனர் மற்றும் நடிகராகவும் மாறியவர் ராகவா லாரன்ஸ்.
முனி படத்தின் அடுத்தடுத்த பாகங்களை இயக்கி நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இயக்குனர் அடையாளத்தையும் ராகவா லாரன்ஸ் உருவாக்கி கொண்டார்.
கடைசியாக, காஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக்கான் லக்ஷ்மியை இயக்கி இருந்த லாரன்ஸ், தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சந்திரமுகி 2, ருத்ரன், துர்கா, அதிகாரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிப்பதிலும் ராகவா லாரன்ஸ் கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது. இதில், சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த், பிரபு, வடிவேலு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்து மெகா பிளாக்பஸ்டர் ஆகி இருந்த திரைப்படம் 'சந்திரமுகி'. இந்த படத்தை இயக்கிய பி. வாசு தான் தற்போது 'சந்திரமுகி 2' படத்தையும் இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் ராகவா லாரன்ஸுடன் வைகைப் புயல் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்து வருகின்றனர். அவ்வப்போது சந்திரமுகி 2 படத்தின் BTS புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி அதிகம் வைரலாகியும் வந்தது.
திரைப்படங்களில் மிகவும் தீவிரமாக இயங்கி வந்தாலும் மறுபக்கம் தனது அறக்கட்டளை மூலம் தொடர்ந்து பல மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளையும் செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ்.
சமீபத்தில் கூட தனது அறக்கட்டளைக்கு இதுநாள் வரை நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ், தற்போது நல்ல நிலையில் இருப்பதால் இனி மக்களுக்குச் சேவை செய்யும் முழுப் பொறுப்பையும் தானே ஏற்க முடிவு செய்ததாக கூறி நன்கொடை வழங்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், தனது பிறந்தநாள் தினத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துள்ளார் ராகவா லாரன்ஸ். ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான லார்ன்ஸ், ட்விட்டரில் அவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "எனது பிறந்தநாளில் தலைவர் மற்றும் குருவிடம் இருந்து ஆசீர்வாதம் பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு சேவை செய்ய முடிவு செய்வேன். பசியின் மதிப்பு எனக்கு தெரியும் என்பதால் இந்த முறை அன்னதானம் செய்ய முடிவு எடுத்துள்ளேன். நான் சில இடங்களுக்கு தனிப்பட்ட முறையில் சென்று என்னால் முடியும் போது உணவு விநியோகம் செய்ய உள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.