ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்த 'காஞ்சனா 3' திரைப்படம் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அதனைத் தொடர்ந்து அவர் தனது 'காஞ்சனா' படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்துவருகிறார். இந்த படத்தில் அக்ஷய் குமார், கியாரா அத்வானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ராகவா லாரன்ஸ் பல்வேறு சமூக சேவைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகிறார், முக்கியமாக சமூக நலன் சார்ந்த விஷயங்களுக்கு தனது பங்களிப்பை வழங்கி வருகிறார். மேலும், அவர் தனது படங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்புகள் தருவது பாராட்ட வேண்டிய செயல்.
மாறி வரும் நகரமயமாக்கல் சூழலில் வயதான பெற்றோர்கள் தனித்துவிடப்படும் நிலை தொடர்கதையாகி வருகிறது.நம்மை ஈன்றெடுத்த தாய் தந்தையரை தன் சுயநலத்திற்காக தனித்துவிடும் இச்செயல் மன்னிக்க முடியாத ஒன்றாக பார்க்கப்படுகிறது. தன் தாய் மீது மிகுந்த அன்பு கொண்ட ராகவா லாரன்ஸ், தனது படங்கள் மற்றும் பல்வேறு நேர்காணல்களில் தாயின் பெருமைகளை பறைசாற்றிவருகிறார்.
இதுகுறித்து அவர் பேசும்போது, "3 வருடங்களுக்கு முன் மனநலம் பாதிக்கப்பட்ட தாய் என்னிடம் வந்து ஏன் என்னை விட்டு சென்றாய் என்று கேட்டார். பின்பு எனக்கு அருகில் இருந்தவரிடமும் அதே கேள்வியை கேட்டார். எனக்கு இந்த சம்பவம் என் மனதில் மிகுந்த வலியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ஏற்படுத்திய தாக்கத்தினால் இதற்காக ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தேன். இது சமூதாயத்தில் ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்தினாலும் வரவேற்கத்தக்கது." என்றார்.
இந்நிலையில் வருகிற மே 12 ஆம் தேதி அன்னையர் தினத்தை முன்னிட்டு ஆதரவற்ற பெற்றோர்களை காக்கும் நோக்கில் தாய் என்கிற பெயரில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் தொடங்க இருக்கிறார்.
மேலும் ராகவா லாரன்ஸ் தனது விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் எடுக்கவிருக்கும் முன்னெடுப்புகள், தனது எதிர்கால திட்டம் ஆகியவை குறித்து வீடியோ ஒன்றையும் அவர் மே 12 அன்று வெளியிட இருக்கிறார். அதில் தாயின் பெருமைகளையும், தியாகத்தையும் அனைவருக்கும் உணர்த்தும் வகையில் பாடல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. விரைவில் இந்த பாடலுக்கு அவர் நடனமாடும் வீடியோவைும் அவர் வெளியிடவுள்ளார்.