கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸானது.
இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். அனிருத் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே இந்த படத்தை தயாரித்தது.
இந்த படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்தனர். நடிகர் சூர்யா, ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
இதற்காக கமல்ஹாசன், சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை பரிசாக அளித்தார். உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்தது. கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்தது. தற்போது இந்த சாதனையை பொன்னியின் செல்வன் முறியடித்து உள்ளது.
இந்த படத்தின் வெற்றிக்கு காரணமான இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு'லெக்ஸஸ்'ரக காரை பரிசாக அளித்தார் கமல்ஹாசன். அதேபோல் உதவி இயக்குனர்களுக்கு இருசக்கர வாகனங்களை பரிசளித்தார் தயாரிப்பாளர் கமல்ஹாசன்.
இந்த படத்தின் ஓடிடி மற்றும் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியது. இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் ஏற்கனவே வெளியாகி உள்ளது. கடந்த தீபாவளிக்கு விக்ரம் திரைப்படம் விஜய் டிவியில் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை நடிகர் ராகவா லாரன்ஸ் அளித்துள்ளார். அதில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், விக்ரம் படம் குறித்தும் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். "விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி நடித்த சந்தனம் கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டியது. கால்சீட் இல்லாததால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. இருப்பினும் விக்ரம் படத்தில் நடிக்க முடியாமல் போனதற்காக வருத்தம் எதுவும் இல்லை. விரைவில் லோகேஷ் கனகராஜ் கதை, வசனத்தில் ரத்ன குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளேன்" என ராகவா லாரன்ஸ் பதில் அளித்தார்.