திரைப்படங்களாகட்டும், சின்னத்திரையாகட்டும் தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் கதாப்பாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பவர் நடிகை ராதிகா. மணிரத்னம் கதை எழுதி தயாரித்த 'வானம் கொட்டட்டும்' படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு சரத்குமாருடன் இணைந்து ராதிகா ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது நடிப்பு விமர்சகர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டது.
தற்போது அவரது நடிப்பில் சன் டிவியில் மறு ஒளிபரப்பாகும் சித்தி தொடர் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் அவரது மகன் ராகுலுக்கு இன்று 16 வது பிறந்தநாளை முன்னிட்டு ராதிகா மற்றும் சரத்குமார் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர். இதனை அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர, ராகுலுக்கு ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராதிகாவின் மகள் ரேயான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராகுலுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அந்த பதிவில், நீ எப்பொழுதுமே எனது முதல் குழந்தை என குறிப்பிட்டுள்ளார்.