கடைசியாக 'ஒத்த செருப்பு' படத்தை இயக்கி இருந்த பார்த்திபன், அடுத்ததாக இயக்கும் திரைப்படம் 'இரவின் நிழல்'.
ஒரே ஷாட்டில், அதுவும் நான் லீனியர் வகையில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தினை இயக்குவது மட்டுமில்லாமல் நடிக்கவும் செய்துள்ளார் பார்த்திபன்.
முன்னதாக, கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான 'விக்டோரியா' என்னும் ஜெர்மானிய திரைப்படம், ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு, ஆஸ்கர் விருதின் இறுதி பட்டியல் வரை சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
பார்த்திபன் - ரஹ்மான் காம்போ
இரவின் நிழல் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார். முன்னதாக, ரஹ்மான் மற்றும் பார்த்திபன் ஆகியோர், கடந்த 2001 ஆம் ஆண்டு, ஒரு திரைப்படத்தில் இணைவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களினால் அந்த படம் கைவிடப்பட்டது. தொடர்ந்து, சுமார் இருபது ஆண்டுகளுக்கு பிறகு, இந்த காம்போ இரவின் நிழல் படம் மூலம் இணைந்துள்ளது.
ஆக்ரோஷம் கலந்த பார்த்திபன்
இந்நிலையில், இரவின் நிழல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை பிரபல இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார். இதில், காளி ஒன்றின் கையில் துப்பாக்கி ஒன்று இருக்க, அதன் முன்பே முட்டி போட்டு இருக்கும், பார்த்திபன் மிகவும் அக்ரோஷமாகி கத்துவது போல அமைந்துள்ளது. இன்னொரு போஸ்டரில், கையில் டார்ச் லைட் ஒன்றுடன் எதையோ பார்த்திபன் பார்த்துக் கொண்டிருப்பது போன்றும் இடம்பெற்றுள்ளது.
வித்தியாசமான முயற்சி
ஒத்த செருப்பு எனும் திரைப்படத்தில், பார்த்திபன் மட்டுமே நடித்திருந்தார். இதற்கு ஸ்பெஷல் ஜூரி பிரிவில் தேசிய விருதும், படத்தில் பணியாற்றிய ரசூல் பூக்குட்டிக்கு சிறந்த ஆடியோகிராபிக்கான தேசிய விருதும் கிடைத்திருந்தது. அந்த வகையில், இரவின் நிழல் படமும் சற்று வித்தியாசமாக ஒரே ஷாட்டில் உருவாகவுள்ளது. இப்படி வித்தியாசமான விஷயங்களை தனது படைப்புகளில் முயற்சி செய்து பார்க்கும் பார்த்திபனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும், தற்போது அதிகம் வரவேற்பினை பெற்று வருகிறது.
இதனிடையே, ஒத்த செருப்பு படத்தின் ஹிந்தி ரீமேக்கை நடிகர் அபிஷேக்பச்சனை வைத்து, பார்த்திபன் இயக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.