'திரௌபதி' திரைப்படம் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. ஆனாலும் இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் இயக்குநர் மோகன்.ஜி தனது ட்விட்டர் பக்கம் மூலம் இயக்குநர் பா.ரஞ்சித்தை படம் பார்க்க அழைத்த நிகழ்வு பரபரப்பானது.
கிரௌட் ஃபண்டிங் மூலமாக உருவான 'திரௌபதி' திரைப்படத்தை ஜிஎம் ஃபிலிம் கார்பரேஷன் சார்பாக மோகன்.ஜி தயாரித்து இயக்கியுள்ளார். ஜூபின் இந்த படத்துக்கு இசையமைக்க, மனோஜ் நாராயண் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
'திரௌபதி' படத்தில் ரிஷி ரச்சர்டு ஷீலா, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை பாராட்டி அர்ஜூன் சம்பத் எச்.ராஜா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பேட்டியளித்தனர். அதில், 'இந்த படத்தை அப்பாக்கள் தனது மகள்களுடன் பார்க்க வேண்டும்'' என்று தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி, வருகிற மார்ச் 8 ஆம் தேதி உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு தன் ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் பெண்களை திரௌபதி படம் பார்க்க வைத்துள்ளார். இதற்கு இயக்குநர் மோகன்.ஜி தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக நன்றி தெரிவித்தார்.