அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.
லைகா தயாரித்திருக்கும் இத்திரைப்படம் 2 பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” வரும் 2022 செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாப் பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” கதையை திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர். சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் பட நடிகர்கள் பார்த்திபன், திரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி பங்குபெற்ற பிஹைண்ட்வுட்ஸ் பிரத்தியேக நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது,. மணிமேகலை தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி, “மணிரத்னம் சார் ஒரு XL ஃபைலை படிக்க சொன்னாரு .. படிச்சுட்டு எப்படி இருக்குன்னு கேட்டாரு.. நானும் படிச்சுட்டு புரியலனு சொல்லிட்டேன். சரி மூடிவெச்சுருனு சொன்னாரு.. அதுதான் பொன்னியின் செல்வன்னு எனக்கு தெரியாது,!” என கூறினார்.
இதேபோல், தன் தந்தை வாடகை சைக்கிளில் சென்று பொன்னியின் செல்வன் நாவலை வாங்கி படித்துவிட்டு வந்ததாக சொல்லி, அதன் பெருமை தனக்கு தெரியும் என்பது குறித்து ஜெயம் ரவி பேசினார்.
மேலும் நடிகர் பார்த்திபன் பொன்னியின் செல்வன் படம் குறித்து பேசும்போது வார்த்தை ஜாலங்களால் அழகு சேர்க்க, இப்படத்தில் பார்த்திபன் - சரத்குமார் ஆகிய நடிகர்கள் எல்லாம் சாதாரணமாக உணவு இடைவேளைகளில் கூட செந்தமிழில்தான் பேசுவார்கள் என்று திரிஷா கூறினார்.