Time Loop பாணியில் அமைந்துள்ள மாநாடு படம் கடந்த மாதம் (25.11.2021) வியாழன் அன்று உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியானது. 'மாநாடு' படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு (Venkat Prabhu) இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை V ஹவுஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். சிம்புவுக்கு கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க வில்லனாக முக்கிய வேடத்தில் நடிகர் எஸ்ஜே.சூர்யா நடித்துள்ளார். இவர்களுடன் பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹாத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர், யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒளிப்பதிவை ரிச்சர்டு எம்.நாதன் கவனிக்க, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இந்த படம் முதல் இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 14 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரப்பூர்வமாக டிவிட்டரில் அறிவித்தார். இந்நிலையில் மூன்றாம் நாள் வசூலாக 8 கோடி ரூபாயை மாநாடு படம் வசூலித்துள்ளதாக சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். முதல் மூன்று நாட்களில் 22 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். இந்நிலையில் படத்தின் சாட்டிலைட் உரிமை தொடர்பாக படத்தின் பைனான்சியர் உத்தம் சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மீது டி.ராஜேந்தர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். டி.ராஜேந்தர் தொடர்ந்துள்ள இந்த வழக்கில் பைனான்சியர் உத்தம் சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இருவருக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,''மாநாடு படத்தின் டிவி ஒளிபரப்பு சாட்டிலைட் உரிமை விற்காமல் இருந்ததால் மாநாடு படம் வெளியாவதில் சிக்கல் எழுந்தது. டி.ராஜேந்தர், ரூ.5 கோடி பொறுப்பேற்றுக் கொண்டு, படம் ரூ.5 கோடிக்கு குறைவாக விற்றால் அதற்கான தொகையையும் டி.ராஜேந்தரே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற நிபந்தனையுடன் பைனான்சியர் உத்தம் சந்த் கடிதம் எழுதி அதில் டி.ராஜேந்தரின் கையெழுத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார். அதன் பிறகே மறுநாள் படம் வெளியாகியுள்ளது. படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில் டி.ராஜேந்தரிடம் தெரிவிக்காமலேயே பைனான்சியர் உத்தம் சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இருவரும் படத்தின் சாட்டிலைட் உரிமையை தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு விற்க முற்பட்டுள்ளனர்''. என குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார், அதில், "வெற்றிக் கிரீடத்தை மக்களும், உழைப்பும் இணைந்து தலை சூடியிருக்கிறது... கொண்டாடி மகிழ்வதை விட்டுவிட்டு வழக்கா??? நல்லதே வெல்லட்டும். நன்றி இறைவா...." என குறிப்பிட்டுள்ளார்.