தயாரிப்பாளர் சங்கம் முன்வைத்த கோரிக்கைக்கு நீதிமன்றம் கொடுத்த பதில் குறித்து தயாரிப்பாளர் தாணு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் கலைப்புலி எஸ்.தாணு. விஜய் நடிப்பில் இவர் தயாரித்த துப்பாக்கி, தெறி உள்ளிட்ட படங்கள் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றன. மேலும் கடந்த ஆண்டு இவர் தயாரிப்பில் தனுஷ் நடித்து வெளியான அசுரன் ப்ளாக்பஸ்டர் ஆனது.
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் பிரீமியம் காப்பீட்டு தொகை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் எஸ்.தாணு. அதில் அவர் கூறியதாவது, ''தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் காப்பீட்டு பிரீமியம் செலுத்துவது தொடர்பாக ஒரு மனுவை முன்வைத்தனர் .அந்த மனுவை நீதிபதி திரு N.சதீஷ்குமார் விசாரித்துள்ளார். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞரான திரு அரவிந்த் பாண்டியன் குறுக்கிட்டு இந்த வழக்கு சம்மந்தமாக எந்த ஒரு ஆணையும் பிறப்பிக்கக்கூடாது என்ற கோரிக்கையை வைத்துள்ளார்.
இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி சதீஷ்குமார் 20 ஜூலை 2020 அன்று இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளார் .அதே சமயத்தில் மனுதாரர்களான தயாரிப்பாளர்கள் சங்கம், அறக்கட்டளை சார்பாக ஒரு தனி வழக்காக தொடரும்படி நீதிபதி சதீஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார்'' என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த அறிக்கையில், 1978 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ள வாசன் விஷூவல் வென்சர்ஸ் நிறுவன தயாரிப்பாளர் கே.எஸ்.ஸ்ரீநிவாசன் சிறுநீர பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர் என்றும் அவருக்கு வாரத்தில் இரண்டு முதல் மூன்று முறை வரை ஹெமோடயாலசிஸ் (Hemodialysis) செய்ய வேண்டியிருப்பதையும் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு உதாரணம் மட்டுமே என்றும் இதுபோன்ற நிறைய பிரச்சனைகளை தயாரிப்பாளர்கள் எதிர்கொண்டுவருவதாகவும் அவர்களுக்கு இந்த காப்பீடு உதவிகரமாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.