நடிகை சூர்யா தயாரித்து ஜோதிகா முதன்மை வேடத்தில் நடித்துள்ள 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் ஃபிளாட்பார்மில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியது. இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடையே மாறுபட்டக் கருத்து நிலவி வருகிறது.
மேலும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மேலும் பாதிப்புகள் அதிகம் உள்ள பகுதிகளில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் திரையரங்க வணிகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர்களும் தங்கள் தரப்பு நியாயங்களை கூறி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் Behindwoods TV-க்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், 'கடந்த 10 வருடங்களாக ஆயிரக்கணக்கான படங்கள் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. இது பற்றி எந்தத் திரையரங்க உரிமையாளர்களாவது கவலைப்பட்டார்களா ? எங்களுக்கு எந்த வழி கிடைக்கிறதோ அதன் வழி எங்கள் படங்களை ரிலீஸ் செய்து எங்கள் முதலீட்டை நாங்கள் காப்பாற்றிக்கொள்வோம்.
பின்னர் கிடைக்கப்பெற்ற மூதலீட்டைக் கொண்டு திரும்ப படம் தான் எடுக்கப் போறோம். எங்கள் வாய்ப்பு வசதி இருக்கோ அது போல நாங்கள் பயன்படுத்திக்கொள்வோம். எங்களை கட்டுப்படுத்தவோ, பயமுறுத்தவோ யாரும் தயாராக இருக்கக்கூடாது.
பெரிய நடிகர்களின் படங்களை தான் ஒடிடி வாங்கி வருகிறார்கள். எந்த சிறு படங்களையும் ஒடிடி வாங்கவில்லை. மாஸ்டர் படம் பேசப்படுவதாக சொல்கிறார்கள். ஆனால் விஜய் ஒத்துக்கொள்ளமாட்டார் என்பது என் கணிப்பு. அவர் தியேட்டரில் போடுவதைத் தான் அவர் விரும்புவார். தியேட்டருக்கு நிகராக விலை கொடுத்து வாங்குகிறார்கள்.
நல்ல விலை கொடுத்து பொன்மகள் வந்தாள் படத்தை வாங்கியிருக்கிறார்கள். ஹிந்தியில் சல்மான் கான் படத்தை 520 கோடிக்கு வாங்கியிருக்கிறார்கள். அதே போல 'மாஸ்டர்' படத்தையும் பெரிய விலைகொடுக்க தயாரா இருக்காங்க. சிறிய படங்களை அவர்கள் கவனிக்கவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.