கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் அதன் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் சுமார். 101 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழப்புகள் உள்ளிட்ட பாதிப்புகள் ஒருபுறம் இருக்க, கொரோனா வைரஸ் காரணமாக வணிகம் உள்ளிட்டவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திரைத்துறை பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. முன்பே திட்டமிடப்பட்ட சினிமா படப்பிடிப்புகள் , ரிலீஸ் தேதி ஆகியவை பெரும் சிக்கலை சந்தித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் பிரபலத் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.. அதில், ''தற்போது பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் திரைப்படங்களில் பணிபுரியும் ஹீரோ, ஹீரோயின்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோர் தங்களது சம்பளத்தில் 30 சதவீதத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் திரைப்பட ஃபைனான்சியர்கள் 3 மாத வட்டியை தள்ளுபடி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் தியேட்டர் ஓனர்கள், விநியோகிஸ்தர்கள் ஆகியோரிடம் சிறிய படங்களுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்றும், ஊரடங்கு அறிவிப்புக்கு முன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிரு்த படங்களை திரும்ப வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்'' இவ்வாறு தனது பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.