சென்னை, 20,பிப்ரவரி 2022: உலகம் முழுவதிலுமான கடுமையான லாக்டவுன் மற்றும் தொற்றுநோய் நெருக்கடி இருந்தபோதிலும், நடிகர் அஜித் குமாரின் ‘வலிமை’ படம் ரசிகர்கள், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் பொது பார்வையாளர்கள் மத்தியில் தனது அந்தஸ்தை பெருமளவில் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
தொழில்நுட்பக்குழு
இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கலை இயக்குனராக கதிர் பணியாற்றுகிறார். அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளராகவும், சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் ஆகியோரும் பணியாற்றுகிறார்கள். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார்.
‘வலிமை’ படம் குறித்த எதிர்பார்ப்பு
இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, மொழி, நாடு எனும் காரணிகளுக்கு அப்பாற்பட்டு உலகம் முழுதுமே ‘வலிமை’ படம் குறித்த எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடம் உச்சத்தில் இருக்கிறது. அஜித்குமாரின் திரை ஆளுமை, உயர் தொழில்நுட்பம், மற்றும் காட்சி துணுக்களில் இருந்த அதிரடி ஆக்சன் ஆகியவை படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பை தீவிரப்படுத்தியுள்ளன.
சிறப்பான ஆக்ஷன் காட்சிகள்
இந்தப் படத்தை Zee Studios மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் இது குறித்து சொல்லும்போது, “வலிமை தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும்.
இத்திரைப்படத்தில் குடும்ப உறவுகளின் உணர்வுபூர்வமான தருணங்கள், சிறப்பான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் அஜித் குமார் மற்றும் பிற நடிகர்களின் அற்புதமான நடிப்பு என அனைத்து அம்சங்களும் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
தயாரிப்பாளர்களால் அதிகம் விரும்பப்படுபவர்
அஜித் குமாருடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட போனி கபூர், “அஜித் மிகவும் அடக்கமான நடிகர், ஒழுக்கம், தனது தொழிலின் மீது மிகுந்த ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகிய குணங்களில் அவர் தலைசிறந்தவர். தயாரிப்பாளர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகர் அவர், என்பதில் எந்த ஆச்சரியமுமில்லை.
படத்தின் ஆரம்ப கட்ட பணிகளின் போது நாங்கள் எதிர்பார்த்தபடி இந்த திரைப்படத்தினை வடிவமைக்க அவர் பெரும் ஆதரவாக இருந்தார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.