விஜய், சூர்யா, மீனா, நயன்தாரா!.. 1200 படங்கள்.. PRO ஜான்சனின் சக்ஸஸ் ஸ்டோரி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மீனாவின் முதல் படத்தில் பணிபுரிந்தது முதல், நடிகை நயன்தாராவை தமிழில் அறிமுகப்படுத்தியது வரை, தம் வெற்றிகரமான கலைப்பயணம் குறித்தும், தளபதி விஜய், சூர்யா, கார்த்தி ஆகியோருடன் பணிபுரிவது குறித்தும், பி.ஆர்.ஓ. ஜான்சன் நம்மிடையே பிரத்தியேகமாக பகிர்ந்துள்ளார்.

திரையில் தோன்றுபவர்களையும், திரைப்படங்களை கண்டுகளிக்கும் மக்களையும் இணைக்கும் பாலமாக இருப்பவர்களை அறிவீர்களா? அவர்கள் தான் பி.ஆர்.ஓக்கள். அதாவது, மக்கள் தொடர்பாளர்கள். அத்தகைய அரும்பெரும் பணியைத் திரைத்துறையில் 30 ஆண்டுகளாக செய்துவரும், பிரபல பி.ஆர்.ஓ திரு. ஜான்சன் தற்போது 1200 திரைப்படங்களை கடந்து தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

“நாகர்கோயில் தான் சொந்த ஊரு... அப்பா ஜான் நேவல் ( NAVAL) ஆபீசர். அம்மா ஜோஹன்னாள். அண்ணன், அக்கா, தங்கை-னு 8 பேர் கொண்ட பெரிய குடும்பம் எங்களோடது. அதுல நான் 7வது பிள்ளை.

                            (திரு.ஜான்சன் அவர்களின் பெற்றோர்)

பாலிடெக்னிக் படிப்பை பாதியில கைவிட்டு, பாம்பே-வில் இருந்த உறவினர் கடையில் வேலைக்கு சென்று, பிறகு மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்து, நண்பர்கள் அறையில் தங்கி உதவி இயக்குநராகனும்னு முயற்சி செஞ்சப்போதான் பத்திரிகை நண்பர்கள் பழக்கமானார்கள். அதுக்கு அப்புறம் நடந்தது தான் ட்விஸ்ட்!” என கலகலப்பாக பேசத் தொடங்குகிறார் ஜான்சன்.

       (மூப்பனாருக்கும் விஜயகாந்துக்கும் இடையில் இருப்பவர் எம்.ஆர்.)

இதுபற்றி ஜான்சன் குறிப்பிடும் போது, தினமலர் அரசியல் ரிப்போட்டர் எம்.ஆர் என்கிற எம்.ராஜாராம் என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர்தான் விஜயகாந்தை மூப்பனாரிடம் அழைத்துச்சென்றவர்.  ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தின் டைரக்டர் ராதாபாரதியின் அண்ணனும் கவிஞர் ரவிபாரதியின் தம்பியுமான எம்.ராஜாராம் என்கிற எம்.ஆர், அந்த சமயத்தில் 'ஒரு புதிய கதை' என்கிற படத்தை தயாரித்தார்.

குழந்தை நட்சத்திரமாக நடித்ததற்கு பிறகு தமிழில், மீனா நாயகியாக அறிமுகமாகிய முதல் படம். ராம.சுப்பையா இயக்கிய அந்த படமே பி.ஆர்.ஓவாக எனக்கு முதல் படம். பாடல்கள் ஹிட். 56 நாள் ஒரேகட்டமாக வெளியூரில் படப்பிடிப்பு. படத்தை சரியாக கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதால், ‘படத்தின் ஸ்டில்ஸ் எடுத்து அனுப்புகிறேன். உங்களுக்கு தான் பத்திரிகையாளர்களை நல்லா தெரியுமே! அவர்களுக்கு தகவல் கொடுப்பதை எல்லாம் நீங்க பார்த்துக்கோங்க’ என்று சொல்லிவிட்டார், தயாரிப்பாளர் எம்.ஆர்.

அதன் பிறகு நடந்த மேஜிக் தெரியுமா? குமுதத்தில் மட்டுமே 3 முறை ரேப்பரில் ‘நடிகை மீனா’ புகைப்படம் வெளியாகி திரைத்துறையில் நல்ல வரவேற்பை பெற்று, அனேகமாக எல்லா புத்தகங்களின் அட்டை படத்திலும் மீனா இருந்தார். பிரபலமாக இருந்த குழந்தை நட்சத்திரமான மீனா, கதாநாயகி ஆனதால் தான் அதற்கு பெரும் வரவேற்பு. அது ஜான்சனுக்கு சாதகமாக அமைந்தது. அதன் பிறகு, யார் இந்தப் படத்திற்கு பி.ஆர்.ஓ.? யார் இந்த பையன்? என எம்.ஆர் அவர்களிடம் வியந்து கேட்கத் தொடங்கியது கோலிவுட் டவுன்!

ALSO READ: "அந்த Show-ல இருந்து வெளியேறியதுக்கு காரணம்.." .. நடிகை வனிதா பரபரப்பு பேட்டி Video!

எம்.ஆர் பற்றி சொல்லும்போது, “நான் அந்த படத்தில் பி.ஆர்.ஓ-வாக நினைத்து பணிபுரியவில்லை. சும்மா ஜாலியாகதான் செய்தேன். ஆனால் படம் பார்க்கும் போதுதான் தெரிந்தது.. ‘நாஞ்சில் ஜான்சன்’ என என் பெயரை டைட்டிலில் அவரே சேர்த்து கொண்டார் என்று. எம்.ஆருக்கு எல்லா நிருபர்களும் நண்பர்கள். ஆனாலும் படம் குறித்த எந்தத் தகவலையும் அவர் நேரடியாக கொடுத்தது கிடையாது. பி.ஆர்.ஓ விடம் கொடுத்தே கொடுக்க சொல்வார். அவ்வளவு மதிப்பு கொடுப்பார். ஆனால், இப்போது வெறும் அவமதிப்புகள் தான். டிவிட்டர் மூலம் எல்லோருமே பி.ஆர்.ஓவாக மாறி விடுகிறார்கள். அந்தப் படத்திற்கு எம்.ஆர் 3 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். நான் வேண்டாம்னு மறுத்தேன். ‘எப்போதுமே, நீ எதையும் சும்மா செய்யாத’ என்று பணத்தைக் கொடுத்தார்.!” என குறிப்பிடுகிறார் ஜான்சன்.

மேலும், தனது தனித்தன்மை குறித்து பகிரும்போது, “எப்போதும் எதையும் புதுசாக செய்ய வேண்டும் என்று நினைப்பேன். முடியாதது ஒன்றுமில்லை. இப்படி செய்ய முடியவில்லையா? அதை மாற்றி செய்யலாம் என்று நினைப்பேன். எங்க வீட்டுல எட்டு பேரு.எல்லோரும் தோசை சாப்பிட்டால் நான் இட்லி வேணும்ன்னு சொல்லுவேன். இட்லி எல்லோரும் சாப்பிடும் போது நான் சப்பாத்தி சாப்பிடுவேன். எப்படியாவது என்னை தனித்தன்மையாக எப்போதும் காட்டிக் கொள்வேன். அந்த பழக்கம் இந்த பி.ஆர்.ஓ வேலைக்கு கை கொடுத்தது என்று நினைக்கிறேன்.” என்கிறார்.

இப்படி‘ஒரு புதிய கதை’யைத் தொடர்ந்து ஜான்சனின் புதிய வாழ்க்கை ஆரம்பமானது. உதவி இயக்குநராக ஆர்.பார்த்திபனிடம் சேரவேண்டும் என நினைத்த ஜான்சனுக்கு PRO என்பது காலத்தின் கட்டாயமாக மாறியது!

“மக்கள் குரல்' ராம்ஜி பரிந்துரையில் பஞ்சு அருணாச்சலம் அழைக்க, அவரிடத்திலும் பி.ஆர்.ஓ வாக பணியாற்றியபோது,‘புது பொண்டாட்டி’ படம் மூலம் பஞ்சு சார் படத்தில் வேலை ஆரம்பித்தேன். PA arts பெரிய ஸ்டார் புரொடியூசர்.  அப்போது, 1993. அந்த நேரத்தில தான் எனக்கு H.J.மனோ அவர்களுடன் திருமணம் நடந்தது. MSc.physics., படித்து விட்டு வேலைக்கு போகாமல், என்னையும் குழந்தைகளையும் கவனிப்பதிலேயே நேரத்தை செலவிட்டாங்க. ‘அவங்க வந்த நேரம்’ என் வாழ்க்கையை உயர்த்தியது. உடனே ரஜினி படம்.

அப்போது பஞ்சு சார் என்னை அழைத்து ‘ரஜினி நடிக்கிற 'வீரா'ன்னு ஒரு படம் ஆரம்பிக்கிறோம். பையன் சுப்புகிட்ட நியூஸ் வாங்கி பிரஸ்-க்கு கொடுத்திடு... 20 வருஷத்திற்கு பிறகு நமக்கு ரஜினி படம் பண்ணுகிறார்’ என்கிற தகவலையும் சேர்த்து பஞ்சு சார் சொன்னார்.

நான் உடனே, ‘சார், 20 வருஷத்துக்கு பிறகு நான் பஞ்சு அண்ணனுக்கு படம் பண்றேன்னு ரஜினி சாரே பிரஸ்ல நேர்ல வந்து சொன்னா அது ஒரு பெரிய பப்பிளிசிட்டி. சார் வருவாங்களா?’ என்று கேட்டேன். சின்ன பையன் சொல்றானே என்றெல்லாம் யோசிக்காமல் அதை உடனே, ‘ஓ.. நல்லா இருக்கே.. கேப்போம்!’ என்று சொல்லி உடனே ரஜினி சாரிடம் ஓகே வாங்கி கொடுத்தார். அடுத்த நாளே நியூ உட்லன்ஸ் ஹோட்டலில் பஞ்சு சாரின் பெர்மனண்ட் காட்டேஜான கிருஷ்ணா காட்டேஜில் தினசரி பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. ‘வீரா’ படம் பெரிய ஹிட். பஞ்சு சார் மிக எளிமையான மனிதர். அதே சமயம் சினிமாவில் அவரை போல ஒரு ஜாம்பவானை பார்க்க முடியாது.! பஞ்சு அருணாசலம் மூலம் டைரக்டர் கே.ஆர்-ன் ‘வனஜா கிரிஜா’ மற்றும் அனைத்து படங்களும் பணியாற்றினேன்” என்று ஜான்சன் நெகிழ்கிறார்.

முன்னதாக டப்பிங் படங்களிலும் பணியாற்றிய அனுபவத்தை பகிரும் ஜான்சன், “நேரடி படங்களுக்கு எப்படியெல்லாம் வேலை செய்வேனோ, அதே வேலைகளை டப்பிங் படங்களுக்கும் செய்தேன். பிரபலமான பாடலாசிரியர் மருதகாசி-யின் மகன் மருதபரணி நிறைய டப்பிங் படங்களுக்கு வசனம் எழுதுவார். அவருடைய எல்லா படங்களுக்கும் நான் பி.ஆர்.ஒ பண்ணத் தொடங்கினேன். தமிழில் ஆண்டுக்கு 190 படங்கள் வரும். அதில் 70 படங்களில் வேலை செய்வேன். 40 படங்கள் டப்பிங் படங்களாக இருக்கும்.

                             (தம் மனைவி திருமதி.H.J.மனோவுடன் திரு.ஜான்சன்)

ஆரூர் தாஸ் வசனத்தில் "பொறந்தவீட்டு பட்டுப்புடவை" என்கிற டப்பிங் படம் ஹிட் அடித்தது. அதை நேரடி படம் போலவே ஆக்கினேன். ஜெமினி சினிமா பத்திரிகையில் இந்தப் படத்திற்கு என தனியாக ஒரு புத்தகமே போடவைத்தேன். டப்பிங் படங்களுக்கு அப்படி நடந்ததே கிடையாது. மெல்ல.. மெல்ல என் பெயர் திரைத்துறையில் பிரபலமாகத் தொடங்கியது. உடன் பணிபுரிந்தவர்கள், அடுத்த படங்களுக்கும் என்னையே அழைப்பார்கள். இன்றுவரை அப்படி வர படங்கள்தான் இவை அனைத்தும்!” என புன்னகைக்கிறார்.

ALSO READ: சிவாங்கி தெறி டான்ஸ்.. ஷூட்டிங் Spot-ல் அச்சு அசலாக ஐஸ்வர்யா ராய் மாதிரியே! வைரல் வீடியோ!

இதை அடுத்து, “அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா... ‘நந்தவனத்தேரு’ என்கிற படம் மூலம் அவரது படங்களுக்கு வேலை கிடைத்தது. அவர்தான் நவரச நாயகன் ‘கார்த்திக் முத்துராமன்’ அவர்களிடம் பெர்சனல் பி.ஆர்.ஓ-வாக சேர்த்துவிட்டார். அவர் மூலம் சுந்தர்.சி-யின் ‘உள்ளத்தை அள்ளித்தா’ படம் கிடைத்தது. 

அடுத்ததாக லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ்-ன் ‘கோகுலத்தில் சீதை’ படம் மூலம் அங்கும் தொடர்ந்தது. ஆர்.பார்த்திபனிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை செய்ய நினைத்தேன் நான், அனால், அவருடன் ‘உள்ளே வெளியே’ படம் மூலம் PRO வாக இணைந்து பணியாற்றினேன்,” என்று குறிப்பிடுகிறார்.

டி.ராஜேந்தரின் ‘ஒரு வசந்த கீதம்’ முதல் 6 படங்களில் வேலை செய்துள்ள ஜான்சன், பாலு மகேந்திரா படங்களிலும், ‘பாரதி கண்ணம்மா’ படத்தை தயாரித்த ஹென்றியின் அனைத்து படங்களிலும், ‘அழகி’ மூலம் இயக்குநர் தங்கர்பச்சான், இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிக்சர்ஸ் படங்களிலும் பணிபுரிந்தார். ஜெயம் ரவி அறிமுகமான எடிட்டர் மோகனின் ‘ஜெயம் புரொடக்‌ஷன்ஸின்’ அனைத்து படங்களிலும் பணியாற்றுகிறார், ஜான்சன்.

ஜான்சன் பணியாற்றிய படங்களுள் குமார் மூவிஸில் கோடி ராமகிருஷ்ணாவின் 'பாரத் பந்த்', 'போலீஸ் லாக்கப்' என விஜயசாந்தியின் படங்கள் ஹிட் அடித்தன. சீயான் விக்ரம் படங்களில் பணிபுரிந்த ஜான்சன், படங்களைத் தாண்டி விக்ரம் எனக்கு நல்ல நண்பர்” என குறிப்பிடுகிறார்.

டைரக்டர் செல்வாவின் ‘சிஷ்யா’ படம் மூலம் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். கவிதாலயாவின் ‘ஆல்பம்’, ‘சாமி’, ‘திருமலை’ மேலும் தொடர்சியாக.., எஸ்.பி.சரணின் கேபிட்டல் பிலிம் ஒர்க்ஸ் ‘உன்னை சரணடந்தால்’, ‘சென்னை-28’ படங்களைத் தொடர்ந்து அனைத்து படங்களில் பணியாற்றியுள்ளார்.

விஷாலின் படங்கள் ‘செல்லமே’, ‘சண்டைகோழி’ என அதிகமாக அவருடைய படங்களிலும் பணிபுரிந்துள்ளார். சிவஶ்ரீ பிக்சர்ஸ், ‘புதிய கீதை’, விஸ்வாஸ் சுந்தரின் பல படங்கள், 'திருடா திருடி' தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் படங்கள், சத்தியஜோதி பிலிம்ஸ், ஆஸ்கர் மூவீஸ், சூப்பர் குட் பிலிம்ஸ், ஜி.கே. பிலிம்ஸ், கிளவுட்9, பி வி பி சினிமா, ராக்லைன், ஜி ஜே சினிமா, ஜெமினி லேப், முரளி சினி ஆர்ட்ஸ், பிரகாஷ்ராஜ் டூயட் மூவீஸ், AGS, நல்லுசாமி பிக்சர்ஸ், பிரமிட் பிலிம்ஸ், சௌந்தர்யா ரஜினிகாந்த் இன் ஆக்கர் ஸ்டுடியோஸ், மெட்ராஸ் டாக்கீஸ், ஸ்டுடியோ கிரீன், எஸ்கேப் ஆர்டிஸ்ட், பொட்டன்சியல் ஸ்டுடியோஸ், பிரின்ஸ் பிக்சர்ஸ், 2D, டிரீம் வாரியர் பிக்சர்ஸ், மாதவ் மீடியா, டிரம் ஸ்டிக் இப்படி பல பெரிய நிறுவனங்களில் ஜான்சன் பணிபுரிகிறார்.

ஜான்சனுக்கு, ‘கனிமொழி’ 1000-மாவது படம். நடிகை சோனா, டி.சிவா இணைந்து தயாரிக்க, ஸ்ரீபதி இயக்கத்தில் நடிகர் ஜெய் ஹீரோவாக நடித்திருந்தார். இப்பட விழாவிற்கு அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்கள் வந்திருந்தார். அந்த நிகழ்வில் ஜான்சனுக்கு, கலைஞரே பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். 

இதே நேரத்தில் ஆர்டிஸ்ட் மேனேஜிங் செய்வதற்கான வாய்ப்புகளும் அமைந்ததை அடுத்து ஜான்சன் இந்த பரிமாணத்திலும் இயங்கியுள்ளார். கனிமொழியை அடுத்து தற்போது மொத்தமாக 1200 படங்களுக்கு மேல் ஜான்சன் வெற்றிகரமாக பணியாற்றியுள்ளார்.

தனது பார்ட்னர்கள் அஜித்குமார், அஜய்குமார் உதவியுடன் விஷால், நயன்தாரா, குட்டி ராதிகா, சதா, தியா, பூஜா காந்தி, சோனா, ப்ரியாமணி, நீத்து சந்திரா, ஷாம், அஜ்மல், ப்ரியா ஆனந்த், பிரசன்னா, லேகா வாஷிங்டன், வினய், ஸ்ரீகாந்த், பாவனா, ரம்யா நம்பீசன், மீரா நந்தன் உள்ளிட்டவர்களுக்கு ஆர்டிஸ்ட் மேனஜர் மற்றும் PRO வாக பணியாற்றிய ஜான்சன், நடிகர் வினய், அஞ்சலி, ஸ்ரியா ரெட்டி, மீரா நந்தன், ரம்யா நம்பீசன், நயன்தாரா உள்ளிட்டோரை தமிழில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

ALSO READ: பிரபல 'சீரியல்' நடிகர், 'பட்டிமன்ற' பேச்சாளருக்கு முக்கிய பொறுப்பு.. தமிழ்நாடு அரசு அதிரடி!

ஆம், நயன்தாராவை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியது குறித்து அவரே கூறுகிறார். “'ஐயா' படத்திற்கு முன்பு தனுஷ் நடித்த 'சுள்ளான்' படத்திற்கு, நயன்தாராவை ஆடிஷனுக்காக அழைத்து சென்றோம். அது கிளிக் ஆகவில்லை. அதனால் நயன்தாரா வருத்தமானார். இது ஆடிஷன் தான்.. நல்ல படம் உங்களுக்கு அமைத்து கொடுக்கிறோம் என்றோம்.. அதன் படி ‘ஐயா’படத்தில் அறிமுகப் படுத்தினோம். நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்தடுத்து படங்கள் அவருக்கு வரத்தொடங்கியது,” என நம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் சகாப்தம் தொடங்கியது குறித்து ஜான்சன் ரிவீல் செய்கிறார்.

இப்போதிருக்கும் நவீன வடிவங்களிலும் திரைப்படத்தை புரொமோட் செய்ய, பி.ஆர்.ஓக்கள் அப்டேட் செய்துக்கொள்ள வேண்டும் என்று கூறும் ஜான்சன், “'வழக்கு எண்-18' திரைப்படத்தின் போஸ்டரைப் பார்த்து, ‘இதற்கு நாம் வேறு விதமான கலர் கொடுக்கலாம்’ என்று தயாரிப்பாளர் லிங்குசாமி, சுபாஷ் சந்திரபோஸ் அவர்களிடம் அடிக்கடி கூறுவேன். அதன்படி, ஆர்.டி. ராஜா என்பவரை புரோமோஷன் ஹெட்டாக அழைத்து வந்தேன். பிரமோஷனுக்காக இப்படியொரு புதிய பாதையை உருவாக்கியதில் எனக்கு பெருமையே.!

அவர் அந்த படத்திற்கு நல்ல கலர் கொடுத்தார். அங்கிருந்து அவர் பையா மற்றும் சிவகார்த்திகேயன் படங்களுக்கு வேலை செய்தார். பின்பு சிவகார்த்திகேயனை வைத்து பல பிரமாண்டமான படங்களை தயாரித்தார், படத்தின் கதையை சொல்லாமல்.. அதே நேரத்தில் பொய் சொல்லாமல்.. ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு, அதை சுவாரஸ்யமாகச் சொல்லி மக்களின் கவனத்தை பெறுவதுதான் சாமர்த்தியம்.  முதல் அடி நெத்தியடியாக இருக்க வேண்டும்.

அதேபோல் தான், ஒரு படத்தின் முதல் பார்வையும் நெத்தியடியாக அனைவர் மனதில் பதிய வேண்டும். அந்த தாரக மந்திரம் தான் என்னுடையது. மக்கள்தான் இங்கு எஜமானர்கள். அவர்களை ஏமாற்றி ஒரு படத்தை ஓட வைத்து விடலாம் என்றால் அது நிச்சயம் முடியாது!” என்று பளீச் பஞ்ச் அடிக்கிறார் ஜான்சன்.

“இயக்குநர்கள் அருண்குமார், அழகம்பெருமாள், சுப்ரமணியம்சிவா, பி.எஸ்.மித்ரன், ஆனந்த், கரு.பழனியப்பன், அணுசரன், பொன்ராம், விக்ரம் கே குமார், பா.ரஞ்சித், பாக்யராஜ் கண்ணன், சேரன், பாரதி, ஏ.ஆர்.முருகதாஸ், வின்சென்ட் செல்வா, சாமி, கண்ணன், சுசி கணேசன், வசந்தபாலன், எம்.ராஜேஷ், வெங்கட் பிரபு, சமுத்திரகனி, ஆண்ட்ரு, சுராஜ், நெல்சன், சந்தோஷ் பீட்டர் ஜெயகுமார், அஸ்வின் சரவணன், ராஜூமுருகன், சாம் ஆண்டன், ஜெகன், த.செ.ஞானவேல், தியாகராஜன் குமாரராஜா, ராஜ்குமார், சக்தி சவுந்தர்ராஜன், ராஜமோகன், முத்துகுமார், லோகேஷ் கனகராஜ் போன்ற பல டைரக்டர்களின் முதல் படத்தில் பணிபுரிந்துள்ளது நல்ல அனுபவம்” என்று நெகிழ்கிறார், ஜான்சன்.

ALSO READ: மிர்ச்சி சிவாவின் புதிய படம்!!... இந்த க்ளாசிக் காமெடி படத்தின் ரீமேக்கா? வைரலாகும் ஃபோட்டோஸ்!

தவிர, விக்ரம், சின்னி ஜெயந்த், சேரன், எஸ்.ஜே.சூரியா, ஆனந்தராஜ், ஜெயம் ரவி, தனுஷ், கரண், பிரபுதேவா, ராகவா லாரன்ஸ், அருண் விஜய், ஸ்ருதி ஹாசன், ரகுமான், ஆதி, ஜீவன் உள்ளிட்டோருக்கு பெர்சனல் பி.ஆர்.ஓவாக பணியாற்றிய ஜான்சன்... சூர்யா, கார்த்தி, விஷால் மற்றும் பல தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் தற்போது பணி செய்துகொண்டு வருவதாகவும் குறிப்பிடுகிறார்.

மேலும் தளபதி விஜய் பற்றி ஜான்சன் கூறும்போது, “விஜய் டான்ஸ், சண்டைக் காட்சிகளில் ஆர்வமாக செய்வதை ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் தளபதி விஜய், அவரது தந்தையின் தயாரிப்புகளில் நடித்துக் கொண்டிருந்தார். அந்நேரம் அவர்களுடைய சொந்த தயாரிப்பில் இருந்து, வெளி தயாரிப்பில் முதல் முதலில் ஒரு படம் புக் செய்யப் பட்டது. நாம் மேலே குறிப்பிட்ட எம்.ஆர் அவர்களின் ‘குமார் மூவீஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பிலான ‘வசந்தவாசல்’ என்கிற அந்த படத்திற்கு (ஆனால், ஆஸ்கர் மூவீஸ் தயாரித்த ‘விஷ்ணு’ திரைப்படம்தான் வெளி தயாரிப்பில் விஜய் நடித்த படமாக முதலில் வெளியானது.) நானும் ஒரு முதல் முக்கிய காரணம் என்பதில் சந்தோஷம்” என புன்னகைக்கிறார்.  

                                 (மனைவி மக்களுடன் திரு.ஜான்சன்)

ஜான்சனுக்கு H.J.மனோ என்கிற மனைவியும், மகள் H.M.அஹில்மா, மகன் H.M.மஹில் என அழகான குடும்பம் உள்ளது. தம் சக்ஸஸ் பாதையில் தம் கலைப் பயணத்தை வெற்றிகரமாய் தொடர்கிறார் பி.ஆர்.ஓ திரு.ஜான்சன்... வாழ்த்துக்கள் சார்!!

தொடர்புடைய இணைப்புகள்

PRO Johnson Success Story 1200 films leading movies artist

People looking for online information on 2D Entertainment, Dream Warrior Pictures, Johnson, JohnsonPRO, Karthi, Lingusamy, Meena, Nayanthara, PRO Johnson, Rajinikanth, Suriya, Vijay, Vishal will find this news story useful.