மன்மதலீலை படம் தொடர்பாக இயக்குனர் வெங்கட்பிரபும் அவரின் தம்பி பிரேம்ஜி அமரனும் ஜாலியாக பகிர்ந்து வரும் டிவீட்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மன்மதலீலை….
மாநாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன், ஸ்மிருதி வெங்கட் மற்றும் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் மன்மத லீலை திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்துக்கு வெங்கட்பிரபுவின் தம்பி பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. இளைஞர்களை முழுக்க முழுக்க கவரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக அடல்ட் காமெடி…
இயக்குனர் வெங்கட்பிரபு இதுவரை நகைச்சுவை, ஆக்ஷன், ப்ரண்ட்ஷிப் மற்றும் டைம் லூப் என வெவ்வேறு விதமான ஜானர்களில் படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் அவர் இயக்கத்தில் முதல்முறையாக அடல்ட் காமெடி படமாக மன்மத லீலை உருவாகியுள்ளது. படம் பற்றி பேசிய வெங்கட்பிரபு ‘கொரோனா காலத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என நினைத்த போது என் உதவியாளர் மணிவண்ணனின் இந்தக் கதை வந்தது. இப்படம் கில்மா படம் கிடையாது. எனக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள், நான் அப்படி படம் எடுக்க மாட்டேன். இந்தப் படம் கண்டிப்பாக அனைவரும் இணைந்து ரசிக்கும் படியான படமாக இருக்கும் உங்களுக்கு பிடிக்கும். இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி’ என ரசிகர்களுக்கு உறுதியளித்திருந்தார்.
வெங்கட்பிரபு vs பிரேம்ஜி அமரன்…
இந்த படம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக காலைக்காட்சி வெளியாகாமல் மதியம் வெளியானது. இதையடுத்து படத்தை ரசிகர்கள் கண்டு ரசித்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் பிரேம்ஜி இந்த படத்தின் போஸ்டரில் தனது அண்ணனும் இயக்குனருமான வெங்கட்பிரபு முன்பு நடித்த படத்தின் ஒரு ஸ்டில்லைப் பகிர்ந்து “ஏம்ப்பா தம்பி” என ஜாலியாக பகிர அது ரசிகர்களைப் பெரியளவில் கவர்ந்தது.
அதையடுத்து இப்போது பிரேம்ஜிக்கு பதிலளிக்கும் விதமாக வெங்கட்பிரபு ஜாலியாக, பிரேம்ஜி நடித்த ஒரு படத்தின் போஸ்டரை பகிர்ந்து அதில் மன்மதலீலை என எடிட் செய்து டிவீட் செய்துள்ளார். அந்த டிவீட்டோடு “இந்தா வாங்கிக்கோ” என கேப்ஷன் கொடுத்துள்ளார். இவர்கள் இருவரின் இந்த ட்வீட்களும் இப்போது வைரலாகி வருகின்றன.