நிவின் பாலி, நஸ்ரியா நசீம் நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது “நேரம்” திரைப்படம்.
இந்த படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான அல்போன்ஸ் புத்ரன் இந்த படத்தைத் தொடர்ந்து இயக்கிய படம் பிரேமம்.
2015 ஆம் ஆண்டு வெளியான மலையாள திரையுலகின் மிகப்பெரிய ஹிட் படமாக ‘பிரேமம்’ படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தனர்.
இந்நிலையில் பிரேமம் படத்தை தொடர்ந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு அல்போன்ஸ் புத்ரன் கோல்டு எனும் தலைப்பிடப்பட்ட படத்தை இயக்குகிறார்.
கேரளாவில் கோவிட் -19 கட்டுப்பாடுகள் காரணமாக, இப்படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலத்திற்கு வெளியே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படத்தை, நடிகர் பிரித்விராஜ், ஹீரோவாக நடித்து தயாரிக்கிறார்.
இதில் பிரித்விராஜ்க்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதை உறுதிப்படுத்தும் வகையில், கோல்டு படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்துகொண்ட புகைப்படம் வெளியானது.
இந்நிலையில் தான் இந்த படத்தில் தற்போது அஜ்மல் அமீர் இணைவதாக தமது ட்விட்டர் பக்கத்தில் அவரே பகிர்ந்துள்ளார்.
விக்னேஷ் சிவன் தயாரிப்பில், மிலிந்த் ராவ் இயக்கத்தில், நயன்தாரா நடித்து அண்மையில் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியான நெற்றிக்கண் படத்தில் அஜ்மல் அமீர் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.