ஜே.எப்.எல். புரொடக்ஷன் தயாரிப்பில் ஜே.கே. வழங்கும் லாகின் திரைப்படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரவீன், வினோத் கிஷன், ப்ரீத்தி நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த லாகின் திரைப்படத்தில் லாகின் செய்வதால் ஏற்படும் விளைவு, த்ரில்லர் பாணியில் சொல்லப்படுவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் கதை நாயகர்களாக அப்புச்சி கிராமம் படத்தில் நடித்த பிரவீனும், அந்தகாரம் படத்தில் நடித்த வினோத் கிஷனும் நடிக்கிறார்கள். ஹீரோயினாக ப்ரீத்தி நடிக்கும் இந்த படத்துக்கு ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்ய, விபின் இசையமைக்கிறார். ராம் கிஷன் கதைக்கு, திரைக்கதை, வசனம் எழுதும் இந்த படத்தை ராஜேஷ் வீரமணி இயக்கி இருக்கிறார்.
இந்த படத்தின் மையக்கருவை பற்றி பார்த்தால், சாப்ஃட்வேரில் பணிபுரியும் நண்பர்கள் 2 பேர், தங்களுக்கு தெரிந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மற்றவர்களின் வாழ்க்கையில் விளையாடுவதாகவும், ஒரு கட்டத்தில் அந்த தொழில்நுட்பம் அவர்கள் வாழ்க்கையிலேயே விளையாட ஆரம்பிப்பதாகவும் கதை நகருகிறது. இப்படி இந்த விளையாட்டின் விளைவை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் வீரமணி.
இன்றைய சூழ்நிலையில் ஏதேதோ தேவைகளுக்காக நாம் லாகின் செய்துகொண்டே இருக்கிறோம், லாகின் செய்து உள்ளே சென்று தெரியாத விஷயங்களையும் தவறான விஷயங்களையும் செய்தோமேயானால் உண்டாகும் விளைவை பற்றியே லாகின் படம் சொல்வதாக இந்த படக்குழுவினர் குறிப்பிடுகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ‘நோ மட்டும் சொல்லாத’ என்கிற பாடல் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது. இப்படி டெக்னாலஜியை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் விரைவில் படக்குழுவினரால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.