தமிழ் சினிமாவில், 90-களின் காலகட்டங்களில் இருந்தே முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் 'டாப் ஸ்டார்' பிரசாந்த்.
தொடர்ந்து, தற்போது தங்களின் சொந்த தயாரிப்பு நிறுவனத்தில், அந்தகன் என்னும் படத்தில் நாயகனாக பிரசாந்த் நடித்து வருகிறார்.
விரைவில் அந்தகன்..
ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்து, கடந்த 2018 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியாகி இருந்த திரைப்படம் அந்தாதூன். இதனை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருந்தார். இதன் தமிழ் ரீமேக் தான் 'அந்தகன்'. இதனை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரித்து இயக்கி வருகிறார்.
பிரசாந்த்துடன், இந்த படத்தில், கார்த்திக், சிம்ரன், ஊர்வசி, யோகி பாபு, பிரியா ஆனந்த், கே.எஸ். ரவிக்குமார்,வனிதா உள்ளிட்ட பலர், முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விரைவில், இந்த திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், சந்தோஷ் நாராயணன் இசையில் சில பாடல்களும் ஏற்கனவே வெளியாகி ஹிட் அடித்திருந்தது.
அந்தகன் திரைப்படத்தில் நடிகர் பிரசாந்த்துடன், நடிகை வனிதா முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார். இந்த நிலையில், பிரசாந்த்தின் பிறந்தநாளையொட்டி வனிதா மற்றும் பிரசாந்த் இருவரும் சந்தித்துப் பேசுவதற்கான ஏற்பாடு, பிஹைண்டவுட்ஸ் நிகழ்ச்சியில் பிரத்தியேகமாக செய்யப்பட்டு இருந்தது.
அதன்படி பிரசாந்துக்கு வாழ்த்து சொல்லி பேசிய வனிதா, "90-களின் பெண்களுக்கு முதல் காதல் நாயகனாக, காதல் மன்னனாக ஒரு க்ரஷ்ஷாக பிரசாந்த் தான் இருக்க முடியும்" என்று திட்டவட்டமாக பேசினார்.
தொடர்ந்து பேசிய வனிதா, "பிரசாந்த் ஒரு ஸ்வீட் ஹார்ட், அவர் எனது நல்ல நண்பர் என்பதைத் தாண்டி, அவருடன் இந்த படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பதை தாண்டி அவர் ஒரு அருமையான மனிதர், மிகவும் பணிவானவர், ஒரு ஸ்டார் இப்படி என்றுதான் இருக்க வேண்டும் என்று நான் சொல்வேன். எல்லாவற்றுக்கும் மேல் யாருக்கும் கிடைக்காத ஒரு அப்பா பிரசாந்துக்கு... அவர் ஒரு கிரேட் ஃபாதர்" என்று குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து வனிதாவுக்கு நன்றி சொல்லி பேசிய பிரசாந்த், "மிகவும் நன்றி. வனிதாவை மிகவும் பிடிக்கும். அவர் மனதில் பட்டதை நேரடியாக பேசக்கூடியவர், அவருக்குள் ஒரு நேர்மை இருக்கிறது. இந்த திரைப்படத்தின் காட்சிகளில் அவருடைய காட்சிகளை நாங்கள் பலமுறை மீண்டும் மீண்டும் பார்த்து போதும் சிரித்துக் கொண்டே இருக்கிறோம். அவ்வளவு அருமையாக நடித்திருக்கிறார். இந்த வருடம் முடிவதற்குள் வனிதாவின் இன்னொரு பரிமாணத்தை அனைவரும் காண்பார்கள். அவர் இன்னும் சினிமாவில் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என்று நான் சொல்வேன்"! என்று குறிப்பிட்டார்.