நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகங்கள் கொண்ட பிரபுதேவா தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானை வைத்து 'ராதே' என்னும் படத்தை இயக்கி வருகிறார். சமீபகாலமாக அவருக்கு திருமணம் ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது அதுகுறித்த விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
அதன்படி மும்பையை சேர்ந்த மருத்துவர் ஹிமானி என்பவரை, அவர் திருமணம் செய்து கொண்டிருக்கிறாராம்.
பிசியோதெரபிஸ்ட்டான அவரிடம் சிகிச்சைக்காக சென்றபோது இருவருக்கும் காதல் மலர்ந்து, தற்போது அது திருமணத்தில் முடிந்துள்ளதாம். கடந்த மே மாதம் சென்னையில் உள்ள பிரபுதேவா வீட்டில் வைத்து திருமணம் முடிந்ததாகவும், இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அறிய நமது தரப்பில் இருந்து பிரபுதேவா மேனேஜரை தொடர்பு கொண்டோம்.
அவர் பிரபுதேவா திருமணம் குறித்து எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை. அவரது குடும்ப உறுப்பினர்களை நாம் தொடர்பு கொண்டபோது, அவர்களும் இந்த விஷயம் குறித்து பேசுவதற்கு விரும்பவில்லை. எனினும் விரைவில் இதுகுறித்து பிரபுதேவா தரப்பில் இருந்து, அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.