சென்னை: ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸ் குறித்து இசையமைப்பாளர் தமன் டிவீட் செய்துள்ளார்.
பாகுபலி படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் பிரபாஸ் 'சாஹோ' படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் கலவையான விமர்சங்களை பெற்றது. அதனைத்தொடர்ந்து காதலை மையமாக வைத்து 350 கோடி ரூபாய் செலவில் யு வி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில் ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் 'ராதே ஷியாம்' படத்தில் நடிக்கிறார். இந்த படம் 1970களில் ஐரோப்பாவில் நடப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பு செய்துள்ளார். பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டேயின் 'ராதே ஷ்யாம்' உலகம் முழுவதும் ஜீலை 30, 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படவிருந்தது. கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை காரணமாக, படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. ஜனவரி 14, 2021 அன்று தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் ராதே ஷியாம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படம் தியேட்டர் வெளியீட்டை தவிர்த்து நேரடியாக OTT-யில் வெளியாகும் என வதந்தி பரவியது. இச்சூழலில் படக்குழு சார்பாக இந்த படத்திற்கு பிண்ணனி இசை அமைக்கும் இசையமைப்பாளர் தமன் டிவீட் செய்துள்ளார். அதில் "ராதே ஷ்யாம், திரையரங்கில் மட்டுமே வெளியாகும் என்றும், பிரம்மாண்டமான காட்சியமைப்பு, உருவாக்கம், சப்தம் உடைய இந்த படத்தை டோல்பி சிஸ்டத்தில் ரசிகர்களுடன் தியேட்டரில் பார்ப்பேன்" என்று கூறியுள்ளார்.
இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை (Theatrical Rights) உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் போஸ்டர், முன்னோட்டம், சிங்கிள் பாடல்கள் வெளியான போதே ரசிகர்கள் பரவசத்தில் ஆழ்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் உலக புகழ்பெற்ற கைரேகை நிபுணர் விக்ரமாதித்யாவாக பிரபாஸ் நடிக்க பூஜா ஹெக்டே பிரபாஸின் காதலியாக வலம் வருகிறார்.