மும்பை: ராதே ஷ்யாம் திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாள் வசூலித்த தொகை வெளியாகி உள்ளது.
ராதே ஷ்யாம் திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று (11.03.2022) வெளியாகி உள்ளது.பாகுபலி படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் பிரபாஸ் 'சாஹோ' படத்தில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து காதலை மையமாக வைத்து 350 கோடி ரூபாய் செலவில் யு வி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில் ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் 'ராதே ஷியாம்' படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் 1970களில் ஐரோப்பாவில் நடப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தின் தமிழக வெளியீட்டை (Theatrical Rights) உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் தியேட்டர்களில் வெளியிட்டு உள்ளார்.
இந்த படத்தில் உலக புகழ்பெற்ற கைரேகை நிபுணர் விக்ரமாதித்யாவாக பிரபாஸ் மனங்களை கொள்ளை கொள்கிறார். பூஜா ஹெக்டே பிரபாஸின் காதலியாக வலம் வருகிறார். சத்யராஜ், ஜெயராம் மற்றும் இந்தியாவின் சிறந்த நடிகர்களும் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களும் இணைந்து பணியாற்றி உள்ளனர்.
இசையமைப்பில் பாடல்களுக்கு ஜஸ்டின் பிரபாகரும், பின்னணி இசைக்கு தமனும் பணியாற்றி உள்ளனர். இந்நிலையில் முதல்நாள் வசூலாக இந்த படம் 79 கோடி ரூபாயை உலக அளவில் வசூலித்துள்ளது என படத்தயாரிப்பு நிறுவனம் டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
காலமும் காதலும் முடிவே இல்லாத ஒரு போரில் எப்போதும் சண்டையிட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக் காலத்தைக் கணிக்கும் ஒரு கவிஞன் தன் கணிப்புக்குள் சிக்காத ஒரு காதலில் விழுந்தால், அவளது அழகில் மயங்கும்போது அவன் கணிப்புகள் பொய்யாகுமா? கனவு கலையும்பொழுது கணிப்பு மெய்யாகுமா? விடையில்லாத சில கேள்விகள் எப்போதும் இந்தக் காற்றில் சுற்றிக்கொண்டிருக்கின்றன.காலம் வெல்லுமா? காதல் வெல்லுமா? எனும் கேள்விக்கு பதிலே ராதே ஷ்யாம் என இயக்குனர் கூறியிருந்தார்.