நடிகர் பவர்ஸ்டார் தமிழ் சினிமாவில் லத்திகா, ஆனந்த தொல்லை உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். பவர் ஸ்டார் என்கிற அடைமொழி ரசிகர்களிடையே பின்னாட்களில் பிரபலமானது. இதனைத் தொடர்ந்து சந்தானம் நடித்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' திரைப்படத்தில் முக்கியமான காமெடி கதாபாத்திரத்தில் பவர்ஸ்டார் நடித்திருந்தார். இதன் மூலம் பவர்ஸ்டார் சீனிவாசன் காமெடி நடிகராக பரவலாக அறியப்பட்டார்.
இதனிடையே தொடர்ந்து பல படங்களில் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் பவர்ஸ்டார், திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து பவர் ஸ்டாரின் ரசிகர்கள் மட்டுமல்லாமல், திரையுலக ரசிகர்கள் பலரும் பதறிப் போயினர். எப்போதும் சிரித்த முகத்துடன், மற்றவர்களை சிரிக்க வைக்கும் பவர் ஸ்டார் இம்முறை வலியில் துடிக்கும் ஒரு வீடியோ, மருத்துவமனையில் இருந்து வெளியானதை அடுத்து அவருக்கு என்ன ஆச்சு என்று பலரும் கேட்க தொடங்கினர்.
இதனிடையே அவரை நேரில் சந்தித்து, பிஹைண்ட்வுட்ஸ் பிரத்தியேகமாக பவர்ஸ்டாரின் உடல்நலம் குறித்து விசாரித்தபோது, விவரித்த பவர்ஸ்டார், “ஒரு திரைப்பட ஷூட்டிங் தம்பி. நான்கு மாதங்களுக்கு முன்பாக நடந்தது. அப்போது கீழே விழுந்து விட்டேன். அப்போது அடிபட்டது எனக்கு தெரியவில்லை. ஒரு வாரத்துக்கு முன்பு தான் எனக்கு வலி வந்தது. மருத்துவமனைக்கு வந்தேன். தண்டுவட எலும்பு லேசாக நகர்ந்துவிட்டதனால் இடதுகால் பாதிக்கப்பட்டு விட்டதாக கூறினார்கள். ஸ்கேன், எக்ஸ்ரே அனைத்தும் எடுத்து சிகிச்சை மேற்கொண்டு வருகிறேன். இப்போது பரவாயில்லை. என்றாலும் வலி இருக்கிறது. இரண்டு மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் பண்ணி விடுவார்கள்.” என்று குறிப்பிட்டார்.
மேலும் பேசியவர், “ஷூட்டிங் முடிவு செய்துவிட்டு அடுத்த நாள் வரச்சொல்லி டிக்கெட் எல்லாம் கூட போட்டார்கள். அந்த நேரத்தில் என்னால் நடக்க முடியவில்லை. அப்போதுதான் நான் மருத்துவமனை சென்று விடலாம் என்று முடிவு செய்து நண்பர் மூலமாக வந்தேன். அனைவரும் என்னை அக்கறை எடுத்து மருத்துவமனையில் பார்த்துக்கொள்கிறார்கள். பெரிய மருத்துவர்கள் தனிப்பட்ட முறையில் நலம் விசாரித்து பார்த்துக்கொள்கிறார்கள். வலிக்கான சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இன்று நான் பவர்ஸ்டார் என்கிற லேபிளில் இருக்கிறேன் என்று சொன்னால், அதற்கு காரணம் என்னுடைய ரசிகர்கள்தான். அவர்களுக்கு நான் என் வருத்தத்தை சொல்வதா? எனக்காக பிரார்த்தனை செய்யும் ரசிகர்களுக்காக மகிழ்ச்சி அடைவதா? என்று தெரியவில்லை. நிச்சயமாக சீக்கிரம் குணமாகி வருவேன்.
ரசிகர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், யாரும் வருத்தப்பட வேண்டாம். இது இயற்கைதான். எல்லா மனிதர்களுக்கும் இருக்கக் கூடியது தான். நான் அப்போதே இதை கவனித்து சிகிச்சை எடுத்திருந்தால், இந்த அளவுக்கு வந்து இருக்காது நான் கவனக்குறைவால் விட்டு விட்டேன். அதனால் உள்ளுக்குள்ளேயே வலி இருந்தது எனக்கு தெரியாமல் இருந்து விட்டது. நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். மகிழ்ச்சியுடன் இருங்கள். நான் நிச்சயம் நலம் பெறுவேன்.
திரைப்படங்களைப் பொறுத்தவரை இரண்டு பட படப்பிடிப்புகள் அடுத்தடுத்து வெயிட்டிங்கில் உள்ளன. என் உடல்நிலை கருதி அவர்கள் காத்திருக்கிறார்கள். சிலர் மருத்துவமனைகளுக்கு வந்து என்னை பார்த்து விட்டுச் செல்கின்றனர். தகவல் கேள்விப்பட்டு வனிதா பார்க்க வருவதாக குறிப்பிட்டிருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.