விஜய் படத்தின் இயக்குநர் முதல்முறையாக நடிகராக ஒரு படத்தில் அறிமுகமாகவுள்ளார்.
உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் உள்ளிட்ட படங்களை இயக்கிய மூத்த இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன். இயக்குநரான இவர் விஜய் நடித்த சச்சின் படத்தை இயக்கினார். மேலும் ஈழத்தில் நடந்த போரை மையப்படுத்தி ஆணிவேர் என்ற ஆவனப்படத்தையும் இயக்கினார்.
இதை தொடர்ந்து இவர் பல்வேறு திரைப்படங்களில் திரைக்கதை மற்றும் வசனப் பிரிவில் பணியாற்றியுள்ளார். இதனிடையே தற்போது முதல் முறையாக இவர் நடிகராக ஒரு படத்தில் அறிமுகமாகவுள்ளார்.
ஓ மை கடவுளே படம் மூலம் பிரபலமடைந்துள்ள வாணி போஜன் நடிக்கும் படத்தில் இவர் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் மார்க் ஜோயல் இயக்குகிறார். ஒரே இரவில் நடக்கும் ஒரு த்ரில்லர் படமாக இத்திரைப்படம் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெஹந்தி சர்க்கஸ் புகழ் மாதம்பட்டி ரங்கராஜ் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்திற்கு கசினோ என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் இன்று இணையத்தில் வெளியான இத்திரைப்படத்தின் பூஜை புகைப்படங்கள் படத்தின் மீது எதிர்ப்பார்ப்பை எகிறவைத்துள்ளது.
இத்திரைப்படத்தை பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள இயக்குநர் ஜான் மகேந்திரன், ''கேசினோ, திரைப்படம் ஒரு இனிய தொடக்கம். நடிகனாக , நிச்சயம் எனக்கு பேர் சொல்லும் படமாக அமையும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.