பழம்பெரும் இசையமைப்பாளர் எம்கே அர்ஜூனன் கொச்சியில் உடல்நலக் குறைவு காரணமாக இன்று(ஏப்ரல் 6) மரணமடைந்துள்ள சோக செய்தி கிடைத்துள்ளது. எம்கே ஆர்ஜூனனுக்கு 84 வயதாகிறது.
இசையமைப்பாளர் எம்கே அர்ஜூனன் 50 வருடங்களுக்கும் மேலாக திரையுலகில் பங்காற்றியுள்ளார். மலையாளத்தில் சுமார் 218 படங்களில் 500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளாராம்.
இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகருக்கு மிக நெருக்கமானவர். ஏ.ஆர்.ரஹ்மான் முதன் முதலில் இவருடன் தான் கீ போர்டு பிளேயராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மறைவிற்கு பல்வேறு பிரபலங்கள் தங்கள் இரங்கல்களை சமூகவலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக பிரபல ஒலிவடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி ட்விட்டரில் எழுதியுள்ள இரங்கல் பதிவில், ''உங்கள் நிறைய டியூன்கள் என் நினைவிலேயே இருக்கிறது. உங்களது கலையின் மூலம் பல தலைமுறை இசை ரசிகர்களின் ரசனையை மேம்படுத்தியுள்ளது. உங்களது இழப்பு இசையுலகில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.