பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் இவ்வுலகை விட்டு மறைந்த செய்தி அவரது ரசிகர்களை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் அவருடனான அனுபவங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
நடிகர் இர்ஃபான் கான் நியூரோ எண்டோகிரைன் டியூமர் எனும் கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரபல மருத்துவர் சபரிநாத் ரவிச்சந்தர் இர்ஃபான் கான் குறித்து Behindwoods Air-க்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், ''நியூரோ எண்டோகிரைன் டியூமரால் இர்ஃபான் கான் பாதிக்கப்பட்டிருந்தார். அது நம் உடலில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். முக்கியமாக வயிறு, குடல், நுரையீரல் பகுதிகளில் வரும். நடிகர் இர்ஃபான் கானிற்கு வயிற்றுப்பகுதிகளில் அந்த நோய் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நோய் வருவதற்கான காரணம் மரபணு ரீதியாக வரலாம். மேலும் நம் செயல்பாடுகளாலும் வரலாம். ஜெனிடிக் என சொல்லப்படும் பரம்பரை வழியாக வரலாம். அவர்களுக்கு கருவிலேயே பிரச்சனை உருவாகும். அதனை நம்மால் ஒன்றும்செய்ய முடியாது.
மற்றொன்று நம்மால் தவிர்க்க முடிந்தது. முதலில் அதிகமாக புகைப்படிப்பது. அதிகமான மது அருந்தும் போதும் இது ஏற்படக் கூடும். மூன்றாவது பித்தப்பை கற்கள் உள்ளிட்டவற்றினால் வரலாம். இது தான் அந்த நோய் ஏற்படக்கூடிய முக்கிய காரணிகள்'' என்றார்.