நாடு முழுவதும் மூன்றாம் முறையாக ஊரடங்கை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், சில செயல்பாடுகளுக்கு ஊரடங்கின் போது தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் மதுபானக்கடைகள் சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சென்னை தவிர மற்ற பகுதிகளில் நாளை முதல் (மே 7) மதுபானக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் மதுபானக்கடைகள் ஒன்றின் முன் ஆண்கள், பெண்கள் தனித்தனி வரிசையில் நின்று மது வாங்கிய புகைப்படம் ஒன்று வெளியாகி சர்ச்சையானது. இதுகுறித்து பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக பிரபல ஹீரோயின் மனிஷா யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில், ''இதற்கு முன் பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு சரியாக கடைபிடிக்கப்பட்டதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் குறைந்தபட்சம் இங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி வரிசையில் நிற்கின்றனர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.