இயக்குநர் சசி இயக்கத்தில் தமிழில் 'பூ' படம் மூலம் அறிமுகமானவர் பார்வதி. அந்த படத்தில் தன் மாமா தான் உலகம் என்று வாழும் மாரி என்ற கிராமத்து வெகுளிப் பெண்ணை கண்முன் கொண்டு வந்திருப்பார்.
தொடர்ந்து தனுஷ் உடன் 'மரியான்', 'பெங்களூர் டேஸ்' தமிழ் ரீமேக்கான 'பெங்களூர் நாட்கள்' என ரசிகர்களை தொடர்ந்து தனது நடிப்பால் கவர்ந்தவர், உலக நாயகனின் மகளாக 'உத்தம வில்லன்' படத்தில் ஒரு தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நங்கூரமிட்டுள்ளார். மலையாளத்தில் இவர் நடிப்பில் வெளியான ஆசிட் வீச்சுக்கு ஆளானாலும் தனது லட்சியத்தை கைவிடாத பெண்ணாக 'உயரே' படத்திலும், வைரஸ் படத்திலும் தான் ஒரு நடிப்பு ராட்சசி என்பதை நிரூபித்து வருகிறார்.
நடிகை பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தைப்பருவ ஃபோட்டோவை பகிர்ந்து, ''எனக்கு கேமரா என்றாலே பயம். அந்த லென்ஸ் மிக ஆழமாக என்னைக்குறி வைக்கும் போது நான் அழுவதை நிறுத்தவில்லை. சில, பல முயற்சிகளுக்கு பிறகு நான் அங்கே தைரியமாக நின்றேன். பரந்த கண்களுடன்.
அந்த சிரிப்பு அங்கே எப்படி வந்தது ? நான் ஏமாற்றப்பட்டேன் மக்களே. நான் சிரித்தால் ஜெம்ஸ் (சாக்லெட்) வெளியில் வரும் என்றார்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு நடிகை டாப்ஸி, ''இது மிகவும் கியூட். அழகான கண்கள்'' என கமெண்ட் செய்துள்ளார்.