கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் உணவு தேடி வந்த யானை ஒன்றுக்கு மர்ம நபர்கள் பட்டாசு வைக்கப்பட்டுள்ள பைனாப்பிள் பழத்தை அளித்துள்ளனர். இதன் காரணமாக அந்த யானைக்கு வாய் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கடுமையான வலி காரணமாக அதனால் வேறு உணவை எடுத்துக்கொள்ள முடியவில்லை. இதனையடுத்து வலியை பொறுத்துக்கொள்ள முடியாத யானை அருகில் உள்ள ஆற்று நீரில் இறங்கி, உயிரிழந்துள்ளது. பின்னர் வனத்துறையினரால் அந்த யானை கைப்பற்றப்பட்டு, காட்டுப்பகுதிக்குள் கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டுள்ளது.
அந்த யானையை உடல் கூறாய்வு செய்த மருத்துவர்களுக்கு, யானை கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் விலங்கு நல ஆர்வலர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் யானை உயிரிழந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஹீரோ உள்ளிட்ட படங்களில் நடித்த பாலிவுட் நடிகை ஆதியா ஷெட்டி தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், ''இது கண்டிப்பாக காட்டுமிராண்டித் தனம். இவர்களுக்கு இந்த காரியத்தை செய்ய எப்படி மனம் வருகிறது ? பீட்டா இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.