கொரோனா உலகம் முழுவதும் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேலாக உலகமே முடங்கியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். மேலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வணிகம் உள்ளிட்ட பொருளாதாரம் சார்ந்த அம்சங்கள் பெரும் சிக்கலைச் சந்தித்து வருகிறது. இதன் காரணமாக ஏப்ரல் 20க்கு பிறகு சிலவற்றிற்கு தளர்வுகள் இருக்கும் என்றும் ரெட் ஜோன் பகுதிகள் ஊரடங்கு கடுமையாகக் கடைபிடிக்கப்படும் என்றும் தகவல்கள் கூறப்பட்டன. தமிழகத்தை பொறுத்தவரை தமிழக அரசு இதுகுறித்து அறிவித்த பின்னரே ஊரடங்கு தளர்வுகள் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸினால் பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாதித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக 'பிராட்வே' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நிக் கார்டெரோ கடந்த மார்ச் 31 ஆம் தேதி மூச்சுவிடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக ஐசியூவில் அனுமிக்கப்பட்டுள்ளார். முதல் இரண்டு முறை அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா இல்லை என்பது உறுதியானது. ஆனால் மூன்றாவது பரிசோதனையில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது.
பின்னர் சுயநினைவிழந்ததன் காரணமாக வென்ட்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் வலது காலில் ரத்தம் செல்வது முற்றிலும் தடைப்பட்டுள்ளது. மேலும் ரத்தக்கசிவும் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளை சரிசெய்ய காலை நீக்குவது தான் சரியெனக்கூறி மருத்துவர்கள் அவரது வலது காலை நீக்கியுள்ளனர்.
தற்போது அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்ததாகவும், நிக் தற்போது மெல்ல உடல் நலம் தேறிவருவதாகவும் அவரது மனைவி அமன்டா க்ளூட்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார். மேலும் அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள், நர்ஸ்கள், அவருக்காக வேண்டிக்கொண்ட ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.