மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த பழம்பெரும் நடிகரான விக்ரம் கோகலே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அவர் உயிரிழந்துள்ளார்.
விக்ரம் கோகலே பாரம்பரியமான சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். இவரது கொள்ளுப் பாட்டியான துர்காபாய் காமத் தான் இந்தியாவின் முதல் பெண் சினிமா நடிகை ஆவார். அதே போல, இவரது பாட்டியான கமலாபாய் கோகலேவும் நாட்டின் முதல் பெண் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். மேலும், இவரது தந்தையான சந்திரகாந்த் கோகலேவும் நடிகராக இருந்துள்ளார்.
இப்படி சினிமா பின்னணி குடும்பத்தை கொண்ட நடிகர் விக்ரம் கோகலேவுக்கு தற்போது 75 வயதாகிறது.
மராத்தி, இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழி சினிமாக்களில் நடித்துள்ள விக்ரம் கோகலே, Anumati என்ற மராத்தி திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வென்றுள்ளார். அதே போல, தமிழில் கமல்ஹாசன் இயக்கி நடித்திருந்த 'ஹேராம்' திரைப்படத்திலும் நடித்துள்ளார். இது தவிர இந்திய சினிமாவின் முன்னணி நடிகரான அமிதாப்பச்சனின் நெருங்கிய நண்பராகவும் விக்ரம் கோகலே இருந்துள்ளார்.
பாலிவுட்டில் அமிதாப் பச்சன், சல்மான் கான், அஜய் தேவ்கன், அக்ஷய் குமார், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களுடனும் இணைந்து நடித்துள்ளார் விக்ரம் கோகலே.
சமீப காலத்திலும் சில திரைப்படங்கள் நடித்து வந்த விக்ரம் கோகலே, கடந்த நவம்பர் 5 ஆம் தேதி, மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நல குறைவின் காரணமாக சேர்க்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து, விக்ரமின் இருதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளும் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், வெண்டிலேட்டர் சிகிச்சையிலும் அவர் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், விக்ரம் கோகலே தற்போது காலமானார். பிரபல நடிகர் மறைந்த நிலையில், சினிமா பிரபலங்களான அக்ஷய் குமார், அனுபம் கெர், மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். பழம்பெரும் நடிகர் விக்ரம் கோகலேவின் மறைவு, பலரையும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது.