சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த், தமிழில் புகழ்பெற்ற பிரபல சரித்திர காவியமான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை வெப் சீரிஸாக தயாரிக்கிறார்.
சோழ நாட்டின் பெருமையை பரைசாற்றும் எழுத்தாளர் கல்கியின் சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ கதையை படமாக்க தமிழ் திரையுலகில் பலரும் முயற்சித்து வரும் நிலையில், சவுந்தர்யா அதனை திரைப்படமாக அல்லாமல் வெப் சீரிஸாக உருவாக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில், பிரபல வீடியோ ஸ்ட்ரீம் நிறுவனமான எம்எக்ஸ் பிளேயர், சவுந்தர்யா ரஜினிகாந்தின் மே 6 என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து வெப் சீரிஸாக தயாரிக்கவுள்ளது. சவுந்தர்யா ரஜினிகாந்தின் கனவு புராஜெக்ட்டான இந்த வெப் சீரிஸ் ஹிந்தி மட்டுமின்றி பிற பிராந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், போஜ்புரி மொழிகளிலும் உருவாகவுள்ளது.
இது குறித்து சவுந்தர்யா தனது ட்விட்டரில், ‘பொன்னியின் செல்வன் - இது தான் காவியம். இதை செய்ய வேண்டும், சரியாக செய்ய வேண்டும். ஆரம்பக்கட்ட பணிகள் அனைத்தும் தெளிவுடன் உருவாகி வருவதை உறுதிப்படுத்தும் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறோம். விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வரும் என்றதுடன் #WorkingToSeePonniyinSelvanOnTheDigitalScreenSoon’ என்ற ஹேஷ்டேக்கை பகிர்ந்துள்ளார்.
10, 11ம் நூற்றாண்டுகளில் சோழ சாம்ராஜ்ய பேரரசான அருள்மொழிவர்மனின் வாழ்க்கையை பற்றிய கல்கியின் வரலாற்று நாவல் ‘பொன்னியின் செல்வன்’. பல ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட சோழ அரச பரம்பரையின் ஆட்சிக் காலத்தை பற்றிய விறுவிறுப்பும், வீரமும், தொன்மையும், காதல் மற்றும் நகைச்சுவை கலந்த காவியமாக உருவாகும் இந்த வெப் சீரிஸை சூர்யா பிரதாப் இயக்குகிறார். சவுந்தர்யா ரஜினிகாந்தின் இந்த முயற்சி, பொன்னியின் செல்வன் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.