மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் சிங்கிள், "பொன்னி நதி" தற்போது ரிலீஸ் ஆகி உள்ளது.
மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது.
இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், ரஹ்மான், அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.
தொடர்ந்து, பொன்னியின் செல்வன் படத்தின் இசை உருவாக்க வீடியோ ஒன்றையும், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அது மட்டுமில்லாமல், விரைவில் பொன்னியின் செல்வன் படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், "பொன்னி நதி" என பெயரிடப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தின் முதல் சிங்கிள், தற்போது வெளியாகி உள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த பாடலை அவரே பாடி உள்ளார். மேலும், பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் இந்த பாடலை எழுதி உள்ளார்.
பொன்னியின் செல்வன் நாவலுக்கென ஏராளாமான ரசிகர்கள் உள்ளனர். அப்படி இருக்கும் போது, அதனை திரை வடிவில் காணவும் அவர்கள் அனைவரும் ஆவலாக உள்ளனர். அப்படி ஒரு சூழ்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கிள் என அனைத்தும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளதால், பொன்னியின் செல்வன் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு எகிறி உள்ளது.
செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ள "பொன்னியின் செல்வன் -1" படத்திற்கு ரவி வர்மன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள, தோட்டா தரணி கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். மேலும், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்கு வசனம் எழுதி உள்ளார்.