புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.
முழு வீச்சில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு பல நகரங்களில் பல கட்டங்களாக நடைபெற்றது. இதில் பல கட்ட படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐத்ராபாத், குவாலியர், ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்ச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள். சமீபத்தில் படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.
சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதை “பொன்னியின் செல்வன்”. இது அனைவரும் அறிந்ததே.
இதைத் திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சோழப் பேரரசின் பொற்காலம் துவங்கும் இந்தக் கால கட்டத்தைத் திரைக்குக் கொண்டு வர ஆயிரக்கணக்கான கலைஞர்கள் உழைத்து வருகின்றனர்.