புகழ்பெற்ற எழுத்தாளர் ‘அமரர்’ கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பிரபல நாவல் பொன்னியின் செல்வன்.
மிகப்பெரிய ஹிஸ்டாரிக்கல் கிளாசிக் ஃபிக்ஷன் வகையறா நாவலான இந்த நாவல் பல மேடை நாடகங்களாக முன்னெடுக்கப்பட்டது. எனினும் இந்த நாவலை அடிப்படையாக வைத்து திரைப்படம் உருவாக்குவது என்பது திரைக் கலைஞர்களின் கண்முன் இருக்கும் மிகப்பெரிய சவாலாகவும், அதே சமயம் இந்த நாவலை படமாக்குவது என்பது கனவாகவும் இருந்து வந்தது.
அதற்காக பல முயற்சிகள் நடந்து வந்த நிலையில், தற்போது பிரபல இந்திய - தமிழ் இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வன் திரைப் படத்தை இயக்குவதற்கு தயாரானார். அதன்படி பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிய இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே ரசிகர்களால் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை காண்பதற்கு காத்திருக்க முடியவில்லை.
இதனிடையே பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்தன. ஒருவழியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. அதன்படி இந்த படத்தின் முதல் பாகம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து உருவாக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக பல நகரங்களில் நடைபெற்று வந்தது. அந்த வகையில் புதுச்சேரி, ஹைதராபாத், மத்திய பிரதேசம் என இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்தது. தமிழ்நாட்டிலும் உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது.
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் மற்றும் பலர் நடிக்கும் இந்த திரைப்படத்தின் தமது காட்சிகளை அண்மையில்தான் முடித்ததாக ஜெயம் ரவி அறிவித்திருந்தார்.
அப்போது அதற்கு பதில் கொடுத்த கார்த்தி, தமது ட்விட்டரில், “இளவரசே நீங்கள் செய்ய வேண்டிய பணி இன்னும் முடியவில்லை” என குறிப்பிட்டதுடன், தன் கதாபாத்திரத்தை ரிவீல் செய்து அசர வைத்தார். இதிலிருந்து இளவரசராக ஜெயம் ரவி மற்றும் வந்தியத் தேவனாக கார்த்தி நடிக்கிறார்கள் என்பது ஊர்ஜிதமானது.
இந்நிலையில் படப்பிடிப்பை முடித்த கார்த்தி, திரிஷாவை குறிப்பிட்டு, "இளவரசி நீங்கள் இட்ட ஆணை நிறைவேற்றப்பட்டது" என்றும் ஜெயம் ரவியை குறிப்பிட்டு "இளவரசே என் பணியும் முடிந்தது" என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த பரபரப்பான ட்வீட்டுக்கு தற்போது பதில் அளித்திருக்கும் ஜெயம் ரவி, “வந்தியத்தேவரே.. பணிகளை சிறப்பாக செய்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே!” என்று பதிவிட்டிருக்கிறார்.
இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. பொன்னியின் செல்வன் திரைப் படத்தின் எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்படத்துக்கு இசை அமைத்து வருகிறார். தோட்டாதரணி கலை இயக்குனராகவும், ரவிவர்மன் ISC ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகின்றனர்.