இந்த மாத இறுதியில் பொன்னியின் செல்வன் படம் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் அதற்கு முன்பே, சோழர்களின் வரலாற்றை வெளிக்கொண்டுவரும் முயற்சியாக பொன்னியின் செல்வன் டாக்குமெண்டரி வெளிவர இருக்கிறது. இந்த வீடியோவை Behindwoods தயாரித்திருக்கிறது.
பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு அதே பெயரில் இரண்டு பாகங்களாக திரைப்படத்தை இயக்கி வருகிறார் மணிரத்னம். இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன் 1" செப்டம்பர் 30 ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் என அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் மேற்கொள்ள, கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். லைகா நிறுவனம் இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
இந்த படத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், விக்ரம் பிரபு, கிஷோர், லால், ரஹ்மான், ஷோபிதா துலிபாலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண் மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.
தமிழகத்தின் பிரபல எழுத்தாளரான மறைந்த கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் புனைவு கதையாகும். இந்நிலையில், சோழர்களின் உண்மையான வரலாற்றை வெளிக்கொண்டுவரும் முயற்சியாக பொன்னியின் செல்வன் டாக்குமெண்டரியை தயாரித்திருக்கிறது Behindwoods. ராஜராஜ சோழனின் எழுச்சி முதல் சோழ பேரரசு பரவிய பிரம்மாண்ட வரலாற்றை நம் கண்முன்னே விரிய செய்ய இருக்கிறது இந்த டாக்குமெண்டரி. இந்த டாக்குமெண்டரியை பொன்னியின் செல்வன் படத்தின் நடிகர்களான பார்த்திபன், ஜெயம் ரவி, கார்த்தி மற்றும் த்ரிஷா ஆகியோர் சமீபத்தில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.