புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயரம், லால், ரஹ்மான் ஆகியோர் நடிக்கிறார்கள்.

சமீபத்தில் படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. முழு வீச்சில் நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பல நகரங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் பல கட்ட படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐத்ராபாத் நகரங்களில் முடிந்த பின், தற்பொழுது படக்குழு மத்திய பிரதேசத்தில் உள்ள ஆர்ச்சா நகருக்கு சென்றுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் தான் பங்குபெறும் காட்சிகளை நடித்து முடித்து விட்டதாக நடிகர் ஜெயம் ரவி அறிவித்துள்ளார். மேலும் தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் மணிரத்னத்திற்கு நன்றி கூறியுள்ளார். அதில் "தலைமை மற்றும் கற்றல் ஒருவருக்கொருவர் இன்றியமையாதது. நீங்கள் மிகவும் துல்லியமாக இந்த மகத்தான வேலையை வழிநடத்துவதைப் பார்ப்பது வாழ்நாள் அனுபவமாக இருந்தது சார். உங்கள் ஆசீர்வாதம், உங்கள் நகைச்சுவை, உங்கள் அக்கறையான இயல்பு மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக என்னை நம்பியதற்கு நன்றி சார். உங்களுடன் செட்டில் இருப்பதை நான் உண்மையில் இழப்பேன், உங்களுடன் மீண்டும் வேலை செய்யும் நாளை எதிர்நோக்குகிறேன். இதெல்லாம் என் தாயின் ஆசீர்வாதத்தோடு நடந்தது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் என் அம்மாவுக்கு வாழ்த்துக்கள்...என்றென்றும் உங்கள், பொன்னியின் செல்வன்", என கூறியுள்ளார்.
இதை படித்த பின் நடிகர் கார்த்தி, டிவிட்டரில் ஜெயம் ரவிக்கு பதிலளித்துள்ளார்.
"இளவரசே நீங்கள் அதற்குள் விடைபெற்றுக்கொள்ள முடியாது! நீங்கள் சோழ நாட்டிற்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது . இன்னும் 6 நாட்களில் வடக்கில் வேலைகளை முடித்துவிட்டு தென் மண்டலம் வந்தடைவோம். - வந்தியத்தேவன் " என்று கார்த்தி டிவிட் செய்து , பொன்னியின்செல்வன் படத்தில் தனது கேரக்டர் வந்தியதேவன் என்பதை உறுதி செய்துள்ளார்.
குவாலியர் ஆர்ச்சாவில் இன்னும் 6 நாட்கள் படப்பிடிப்பு மீதி இருப்பதாகவும் அதன் பின் தென்னகப்பகுதிகளில் மீதமுள்ள படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கார்த்தி மறைமுகமாக கூறியுள்ளார். இப்படி கார்த்தி டிவிட் செய்ததை ரசிகர்கள் ரசித்து கொண்டாடுகிறார்கள். மேலும் இரண்டு பாகங்களுக்கான படப்பிடிப்பையும் ரவி நிறைவு செய்துள்ளார். இந்த படத்தில் ராஜ ராஜசோழனாக (அருள் மொழிவர்மன்) (பொன்னியின் செல்வன்) ஜெயம் ரவி நடித்துள்ளார்.
லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. மேலும் இந்த படத்தின் முதல் பாகம் அடுத்த வருடம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவு செய்கிறார்.