புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.
இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான் ஆகியோர் நடிக்கிறார்கள். சமீபத்தில் படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் முதல் பாகம் அடுத்த வருடம் திரைக்கு வர இருக்கிறது.
முழு வீச்சில் நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பல நகரங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் பல கட்ட படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐதராபாத் நகரங்களில் முடிந்த பின், தற்பொழுது படக்குழு மத்திய பிரதேசம் சென்றுள்ளது. அங்கு சில நாட்களுக்கு முன் ஆர்ச்சா, குவாலியர் நகரில் படப்பிடிப்பு தொடங்கியது.
பின்னர் ஆர்ச்சா நகரில் படப்பிடிப்பை முடித்து கொண்டு படக்குழு தற்போது மத்திய பிரதேசத்தில் உள்ள மகேஸ்வர் நகருக்கு சென்றுள்ளது. நர்மதை நதி பாயும் மகேஸ்வர் நகரில் கார்த்தி-த்ரிஷா நடிக்கும் காதல் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக அறியப்படுகிறது.
இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், சியான் விக்ரம் உடன் இருக்கும் BTS புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இவர்கள் பின்னணியில் பெரிய கோட்டை சுவர் உள்ளது.
விக்ரம் இந்த படத்தில் சூழ்ச்சிகளால் அரசனாக முடியாமல் மரணித்த சோழ இளவரசர் ஆதித்த கரிகாலனாக நடிக்கிறார்.