புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.
சமீபத்தில் படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. முழு வீச்சில் நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பல நகரங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் பல கட்ட படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐத்ராபாத் நகரங்களில் முடிந்த பின், தற்பொழுது படக்குழு மத்திய பிரதேசத்தில் உள்ள ஆர்ச்சா, மகேஸ்வர் நகரங்களுக்கு சென்றுள்ளது.
இந்நிலையில் ஆர்ச்சா நகரில் படப்பிடிப்பை முடித்து கொண்டு படக்குழு தற்போது மத்திய பிரதேசத்தில் நர்மதை நதி பாயும் மகேஸ்வர் நகரில் கார்த்தி-த்ரிஷா நடிக்கும் காதல் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக அறியப்படுகிறது. பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன் - குந்தவை சம்பந்தப்பட்ட பழையாறை அத்யாயம் இங்கு படமாக்கப்படுகிறது என அவதானிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் வந்தியத்தேவனாக நடிக்கும் நடிகர் கார்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட BTS படத்தை பகிர்ந்துள்ளார். அதில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனை கிளிக் செய்து, மகேஸ்வர் நகரத்தில் படப்பிடிப்பு நடைபெறுவதை உறுதி செய்துள்ளார்.
இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவு செய்கிறார்.