நடிகர் விஜய் சேதுபதியை நபர் ஒருவர் பெங்களூரு விமான நிலையத்தில் தாக்கப்பட முயற்சித்ததாக கூறப்பட்டது தொடர்பான வீடியோக்கள் அண்மையில் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி நடிகர் மகா காந்தி என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். இந்து மனு குறித்து விஜய் சேதுபதியின் தரப்பு கருத்தை மக்கள் தொடர்பாளர் யுவராஜ் நம்மிடையே பிரத்தியேகமாக தெரிவித்துள்ளார்.
மகா காந்தியின் இந்த மனுவில், தாம் பெங்களூர் சென்றபோது விமான நிலையத்தில் எதிர்பாராத விதமாக நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்ததாகவும், அப்போது அவருடைய சாதனைகளை பாராட்டி வாழ்த்தும்போது விஜய்சேதுபதி அதை ஏற்க மறுத்ததாகவும் அந்த மனுவில் குறிப்பிட்ட மகா காந்தி, பொதுவெளியில் தன்னை அவதூறாக பேசியதாகவும் தெரிவித்து மனு தாக்கல் செய்திருக்கிறார்.
மேலும் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தபின்னர் விஜய்சேதுபதியின் மேலாளர் ஜான்சன் தன்னை தாக்கியதாகவும், அதனால் தம்முடைய செவித்திறன் பாதிக்கப்பட்டதாகவும் அந்த மனுவில் மகா காந்தி குற்றம் சாட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் விஜய் சேதுபதி தாக்கப்பட்டதாக கூறப்படுவது திரிக்கப்பட்டு ஒன்று என்றும், இதனால் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து நாம் நடிகர் விஜய் சேதுபதி அவர்களின் மக்கள் தொடர்பாளர் யுவராஜிடம் தொடர்புகொண்டு கேட்டறிந்தபோது, “அவர்கள் கோர்ட்டுக்கு சென்றால் நாமும் கோர்ட்டில் அதை சந்திப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
‘மக்கள் செல்வன்’ என்று ரசிகர்களாலும் மக்களாலும் அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதியின் கைவசம் காத்து வாக்குல ரெண்டு காதல், விக்ரம், விடுதலை, கடைசி விவசாயி, மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆகிய படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.