கேரளாவைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகி சங்கீதா சஜித், தனது 46 ஆவது வயதில், உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்த சம்பவம், பலரையும் அதிர்ச்சிக்குள் ஆக்கியுள்ளது.
பிரபு தேவா நடிப்பில், தமிழில் வெளியாகி மிஸ்டர் ரோமியோ படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருந்தார். இதில் வரும் "தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை" என்ற பாடலை சங்கீதா தான் பாடி இருந்தார்.
இந்த பாடல், இசை ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ஹிட்டாகி இருந்தது. அதே போல ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற வாராயோ தோழி பாடலின் ஆரம்பத்தில் வரும் "ஞானபழத்தை பிழிந்து" என்னும் பகுதியையும் சங்கீதா தான் பாடி இருந்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அளித்த பரிசு
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில், பிரபல இசை அமைப்பாளர்களின் இசையில் சுமார் 200 க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடி அசத்தி உள்ளார் சங்கீதா. விஜய் பாடி இருந்த 'வெறித்தனம்' பாடலின் ஆரம்பத்தில் வரும் பகுதியையும் சங்கீதா பாடி இருந்தார்.
கே.பி. சுந்தராம்பாளின் ‘ஞானப்பழத்தைப் பிழிந்து’ பாடலையே அதே ராகத்தில் பாடும் சங்கீதா, தமிழக அரசின் திரைப்பட விருது வழங்கும் விழாவில் இதே பாடலை பாடி இருந்தார். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சங்கீதாவை பாராட்டி, தனது கழுத்தில் கிடந்த சுமார் 10 பவுன் தங்க சங்கிலியையும் பரிசாக அளித்திருந்த சம்பவமும் அரங்கேறி இருந்தது.
இசை உலகினர் அதிர்ச்சி
இதனிடையே, கடந்த சில மாதங்களாக, சீறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்த சங்கீதா, திருவனந்தபுரம் பகுதியிலுள்ள தனது சகோதரியின் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் தான், அவர் திடீரென சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார். சங்கீதாவின் திடீர் மறைவு, இசை உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தன்னுடைய தனித்துவமான குரலால், பல ரசிகர்களை கட்டிப் போட்டிருந்த சங்கீதாவின் மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.