தமிழில் பேட்ட படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் நடிகர் நவாஸுத்தீன் சித்திக். இவர் இந்தியில் புகழ்பெற்ற நடிகராவார். சமீபத்தில் அவரது மனைவி ஆலியா அவர் மீது சில குற்றச்சாட்டுகளை முன் வைத்து விவாகரத்து கோரினார். இந்த பிரச்சினை ஓய்வதற்கு முன்னே அவரது தம்பி மகள், நடிகரின் மற்றொரு தம்பி மீது பாலியல் புகார் முன்வைத்துள்ளார்.
அவர் கூறும்பொழுது "நான் எனது சித்தப்பாவின் மேல் பாலியல் புகார் அளித்துள்ளேன். எனக்கு அப்போது 9 வயது இருக்கும். எனக்கு இரண்டு வயது இருக்கும்போதே என் பெற்றோர்கள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். எனக்கு சித்தி வந்தார். அவரால் நான் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டேன். ஒரு குழந்தையாக சித்தப்பா செய்ததை அப்பொழுது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் வளர்ந்த பிறகு அவரது தொடுதல் மோசமாக இருந்ததை உணர்ந்தேன். சில சமயம் தாக்குதலும் இருந்தது" என்று கூறியுள்ளார்.
இதற்கு நடிகர் நவாஸுத்தீன் சித்திக்கின் மனைவி பதிலளித்துள்ளார். அவர் "மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவரக் கூடும். நான் மட்டும் அப்படி தனிமையில் கொடுமை அனுபவிக்கவில்லை" என்று கூறியுள்ளார். நடிகர் நவாஸுத்தீன் சித்திக் இவையெதற்கும் இன்னும் பதில் அளிக்கவில்லை.